சிவகங்கை மாவட்டத்தில் 57 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள்-கலெக்டர் தகவல்

காரைக்குடி : சிவகங்கை மாவட்டத்தில் 57 இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன என கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.

காரைக்குடி அருகே எஸ்.ஆர்.பட்டணம், திருத்தங்கூர் ஆகிய பகுதிகளில் செயல்படும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கலெக்டர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில், ‘அரசின் உத்தரவின்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் உள்ள 12 ஒன்றியங்களில் 57 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

தற்போது காரைக்குடி, கல்லல், இளையான்குடி, காளையார்கோவில் ஆகிய பகுதிகளில் 7 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்கப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்ட மற்ற நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் விவசாயிகளின் தேவைக்கேற்ப உடனடியாக துவங்கப்படும். தற்போது தினமும் 100 டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அனைத்து நிலையங்களும் செயல்படும் போது தினமும் ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாகவும் 32 டன் நெல் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அரசு நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்து பயன்பெற வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்கள் எடுத்து வந்து விற்பனை செய்ய விவசாய பணிகள் மேற்கொண்ட நிலங்களின் அடங்கல், ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண் இவற்றை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் வெளியிட்ட இணையதளத்தில் அந்தந்த பகுதிகளில் இருந்து விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். மனுக்கள் அந்தந்த விஏஓகளுக்கு இணையதளம் மூலம் அனுப்பப்பட்டு 2 நாட்களுக்குள் ஒப்புதல் பெறப்படும்.

 ஒப்புதல் பெறப்பட்ட விவசாயிகள் உடனடியாக விண்ணப்பித்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நெல்கள் எடுத்து வந்து விற்பனை செய்யலாம். அதற்குரிய பணம் வங்கி கணக்கில் உடனடியாக வரவு வைக்கப்படும். இதன்மூலம் விவசாயிகளை தவிர, இடைத்தரகர்கள் பயன்படுத்த முடியாது. விண்ணப்பித்து அனுமதி பெற்ற நாளிலிருந்து கூடுதலாக 7 நாட்கள் வரை அதே அனுமதியை பயன்படுத்தி விவசாயிகள் நெல் விற்பனை செய்யலாம்‘ என்றார். இதில் மண்டல மேலாளர் சாந்தி, துணை மண்டல மேலாளர் பாலகிருஷ்ணன், வட்டாட்சியர் மாணிக்கவாசகம், பிஆர்ஓ பாண்டி, உதவி மண்டல மேலாளர்கள் தங்கராஜ், அழகர்சாமி, தரக்கட்டுப்பாட்டு அலுவலர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: