பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட ஹரக் சிங் ராவத் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியம்: குறைந்தபட்சம் 10 தொகுதிகளில் வெற்றியை தேடி தர முடிவு

உத்தரகாண்ட்: உத்தரகாண்டில் பாரதிய ஜனதாவிலிருந்து நீக்கப்பட்ட ஹரக் சிங் ராவத் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியம் ஆனார். குறைந்தபட்சம் 10 தொகுதிகளில் தனது செல்வாக்கை பயன்படுத்தி காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பை தேடி தர முடியும் என்று அவர் உறுதியளித்திருக்கிறார். உத்தரகாண்ட் பாஜக அரசில் வனத்துறை அமைச்சராக இருந்த ஹரக் சிங் ராவத் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் தனது குடும்பத்தினருக்கு சீட் கேட்டதாக குற்றசாட்டு எழுந்தது. இதனை பாஜக ஏற்க மறுத்ததால் கட்சி தலைவர்களுக்கும், ஹரக் ராவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்து ராவத் வகித்து வந்த அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதுடன், கட்சியிலிருந்தும் 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டார். இந்த அதிரடி நடவடிக்கைகள் உத்தரகாண்ட் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் காங்கிரசில் இணைவதற்கான முயற்சிகளில் இறங்கினார் ஹரக் சிங் ராவத்.

ஆனால் இதற்கு காங்கிரஸ் கட்சியில் எதிர்ப்பு கிளம்பியது. காரணம், 2016ல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அப்போதைய முதலமைச்சர் ஹரிஷ் ராவத்திற்கு எதிராக கலகம் விளைவித்து அவரது அரசு பெரும்பான்மையை இழக்க காரணமாக இருந்தவர் ஹரக் சிங் ராவத். ஆகவே அவரை மீண்டும் காங்கிரசில் சேர்க்க கூடாது என ஹரிஷ் ராவத் ஆதரவாளர்கள் உள்ளிட்ட தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தினர். அவர்களை கட்சி மேலிடம் சமாதானம் செய்ததை அடுத்து ஹரக் சிங் ராவத் மீண்டும் காங்கிரசில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக தன்னை ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கிவீச நினைத்ததாக குற்றம் சாட்டினார். மார்ச் 10 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வரும்போது பாஜக-வின் தோல்வியை கொண்டாடுவோம் என அவர் தெரிவித்தார்.

இதனிடையே, உத்தரகாண்ட் தேர்தலில் தனது செல்வாக்கை பயன்படுத்தி குறைந்தபட்சம் 10 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி தேடி தருவதாக ஹரக் சிங் ராவத் உறுதி அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலில் நைனிடால் தொகுதியில் பாஜகவை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் தீரக் சிங் ராவத்தை எதிர்த்து ஹரக் சிங் ராவத் களமிறக்கப்படுவார் என தெரிகிறது. அதேவேளையில் ஹரக் சிங்கின் குடும்பத்திற்கு காங்கிரசில் சீட் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான் என பேசப்படுகிறது. தேர்தலுக்கு ஒருமாதமே உள்ள நிலையில் ஹரக் சிங் ராவத் காங்கிரசில் இணைந்திருப்பது பாஜக-வுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.                        

Related Stories: