வடகிழக்கு பருவமழையால் பருத்தி உற்பத்தி பெரும் பாதிப்பு: கடந்த ஆண்டைவிட குறைந்தபட்சம் ரூ.3,000 விலை உயர்வு

சேலம்: உலகளவில் பஞ்சு சந்தைகளில் பஞ்சு விலை உயர்வு மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக பருத்தி உற்பத்தி பாதிக்கப்பட்டதன் விளைவாக பஞ்சு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குஜராத் மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் அதிகளவு பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சேலம், கள்ளகுறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அதிகளவு பருத்தி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உயர்தரம் மற்றும் அதிகளவு நூல் எடைகள் உள்ளதன் காரணமாக இப்பகுதியில் பருத்தி வியாபாரிகள் அதிகளவு பருத்தி கொள்முதல் செய்கின்றனர். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக பருத்தி செடிகள் சேதமடைந்து, உற்பத்தி பாதித்து ஒரு ஏக்கருக்கு 10 குவிண்டால் வரக்கூடிய பருத்தி 3 குவிண்டால் மட்டுமே வருகிறது.

இதனால் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் உள்ளிட்ட மண்டிகளுக்கு பருத்தி வரத்து குறைந்துள்ளதாக தெரிவிக்கும் வியாபாரிகள் பருத்தி விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். உலகளவில் பஞ்சு மார்க்கெட்டில் தேவையான அளவிற்கு பருத்தி கிடைக்காததால் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக கூறும் வியாபாரிகள் இதனால் கடந்த ஆண்டைவிட பருத்தி விலை குவிண்டால் ஒன்றிற்கு குறைந்தபட்சம் ரூ.3,000 விலை ஏற்றம் கண்டுள்ளதாக கூறுகின்றனர். கொரோனா கால கட்டத்தில் பஞ்சுமில்கள் தொடர்ந்து இயங்கும் பட்சத்தில் விலை குறைய வாய்ப்பில்லை என குறிப்பிட்ட அவர்கள் வெளிநாடுகளுக்கு பஞ்சை ஏற்றுமதி செய்வதை தடை செய்யவும், இறக்குமதிக்கு விதிக்கப்படும் 11% வரியை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.               

Related Stories: