தேர்வு எழுதாமலேயே பட்டம் பெற முயன்ற 117 மாணவர்கள் குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வியில் தேர்வு எழுதாமலேயே பட்டம் பெற முயன்ற 117 மாணவர்கள் குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. பழம்பெரும் வாய்ந்த சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மையம் மூலம் படித்தவர்களில் 117 பேர் லஞ்சம் கொடுத்து முறைகேடாக பட்டம் பெற முயன்றது அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் இவர்களது தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரிக்க சட்டப்படிப்பு குழு இயக்குனர் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழக சட்ட கல்வித்துறை தலைவரும் ஆட்சிமன்ற குழு உறுப்பினருமான சொக்கலிங்கம் இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்ட கல்வித்துறை பேராசிரியர் வேணுகோபால், இந்தி துறை தலைவர் சிட்டி அன்னபூர்ணா, பொருளியல்துறை தலைவர் சத்தியன், உயிர் வேதியியல்துறை தலைவர் மற்றும் கல்வி பிரிவு முதல்வர் இளங்கோவன் வெள்ளைச்சாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

Related Stories: