தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கு: சிபிசிஐடி விசாரிக்க மாணவியின் தந்தை கோரிக்கை

தஞ்சை: தஞ்சாவூரில் தனியார் பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் அவசர வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை அருகே உள்ள தனியார் பள்ளியில் தங்கி படித்து வந்த லாவண்யா என்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

அரியலூரை சேர்ந்த இந்த மாணவியை பள்ளி நிர்வாகம் மதம் மாற கட்டாயப்படுத்தியதால்தான் தற்கொலை செய்து கொண்டார் என்று பாரதியஜனதாவினரின் குற்றச்சாட்டாகும். ஆனால் பள்ளியின் விடுதி காப்பாளர் தன்னை திட்டியதால் தற்கொலை செய்து கொண்டதாக தனது வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீசார் கூறியுள்ளனர். மதம் மாற்ற குற்றசாட்டை முன்வைத்து மாணவியின் சடலத்தை வாங்காமல் பாரதியஜனதாவினர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக்கோரி மாணவியின் தந்தை முருகானந்தம் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை விசாரணைக்கு ஏற்று கொண்ட நீதிபதி திங்கட்கிழமை அன்று வழக்கை பட்டியலிட பதிவாளருக்கு ஆணையிட்டுள்ளார்.

Related Stories: