பரமக்குடியில் நெல் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் கவலை: ஆன்லைனில் பதிவு செய்து 20 நாட்கள் ஆகியும் நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை

இராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் நெல் மூட்டைகளுடன் காத்துக்கிடக்கின்றனர். பரமக்குடி சுற்றுவட்டார கிராமங்களான கள்ளிக்குடி, கொத்தங்குளம், பி.புத்தூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தொடர்மழை பெய்ததின் விளைவாக ஏராளமான விவசாயிகள் ஆர்வத்துடன் நெல் சாகுபடியில் ஈடுபட்டனர். இதனால் கடந்த ஆண்டை காட்டிலும் இருமடங்கு அதிகமாக சுமார் 5,000 ஹெக்டரில் நெல்சாகுபடி செய்யப்பட்டது. ஏக்கருக்கு ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை செலவு செய்துள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 40 முதல் 50 மூட்டைகள் வரை நெல் விளைச்சல்கள் கிடைத்துள்ளது. ஆனால் ஆன்லைனில் பதிவு செய்து 20 நாட்கள் ஆகியும் நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் நெல்மூட்டைகளுடன் விவசாயிகள் இரவு, பகலாக காத்திருக்கின்றனர்.

கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடன் பெற்று பெரும்பாலான விவசாயிகள் நெல்சாகுபடியில் ஈடுபட்டுள்ள நிலையில் இதுவரை நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் வேதனையுடன் காத்திருக்கின்றனர். நெல்மூட்டைகள் மீது வைக்கோலை பரப்பி இரவு, பகலாக சுழற்சி முறையில் காத்திருக்கும் விவசாயிகள் திடீரென மழை பெய்ய நேர்ந்தால் பாடுபட்டு அறுவடை செய்த நெல்மூட்டைகள் சேதமடையும் என்று கவலையில் ஆழ்ந்துள்ளனர். உடனடியாக நெல்லை கொள்முதல் செய்ய ஆவணம் செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.      

Related Stories: