×

உச்சத்தை தொடுகிறது கொரோனா 3ம் அலை தொடர்ந்து உயர்கிறது தொற்று: தினசரி பாதிப்பு 3.47 லட்சம்; பலி எண்ணிக்கை அதிகரிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 3.47 லட்சம் பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், 3ம் அலை உச்சத்தை எட்ட ஆரம்பித்து இருப்பதாக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.நாட்டில் கடந்த சில மாதங்களாக அடங்கி இருந்த கொரோனா தாக்குதல் மீண்டும் அதிகரித்துள்ளது. ஒமிக்ரான், டெல்டா வைரஸ்களால் 3ம் அலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2 அலைகளைப் போல் இம்முறை பாதிப்புகள் குறைவு என்பதாலும், பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்தே உள்ளது. எனினும், தினசரி தொற்று எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு படுவேகமாக அதிகரிக்கிறது. நேற்று முன்தினம் தினசரி தொற்று 3 லட்சத்தை தாண்டிய நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3 லட்சத்து 47 ஆயிரத்து 254 பேர் புதிதாக பாதித்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த பாதிப்பு 3.85 கோடியாக உள்ளது.

இறப்பு எண்ணிக்கையும் சற்று அதிகரித்தது. கடந்த 24 மணி நேரத்தில் 703 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி 4.88 லட்சமாகும். சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20 லட்சத்து 18 ஆயிரத்து 825 ஆக அதிகரித்துள்ளது. இது, கடந்த 235 நாளில் இல்லாத அளவு அதிகபட்ச எண்ணிக்கையாகும். ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை 9,692 ஆக பதிவாகி உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 160 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.2வது அலையின்போது கடந்த மே 7ம் தேதி 4.14 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதே. இதற்கு முன் இந்தியாவில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பாகும். இந்த எண்ணிக்கை தற்போது நெருங்கப்படுவதால் 3வது அலை உச்சத்தை தொட்டிருக்கலாம் என்றும், அடுத்த சில வாரங்களில் தினசரி தொற்று எண்ணிக்கை உச்சபட்ச அளவில் இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் வந்தாலும் அவர்கள் அரசு தனிமைப்படுத்தும் மையத்தில் கட்டாயம் தங்க வேண்டும் என்ற விதிமுறையை ஒன்றிய அரசு தளர்த்தியுள்ளது. வெளிநாட்டு பயணிகள் வந்ததும் அவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என பரிசோதனையில் தெரிந்தால், அவர்கள் சிகிச்சை பெறவோ, தனிமைப்படுத்திக் கொள்ளவோ வேண்டும். இந்த தளர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

ஊரடங்கை ரத்து செய்ய டெல்லி ஆளுநர் மறுப்பு
தலைநகர் டெல்லியில் கடந்த வாரம் தினசரி தொற்று 28,000 ஆக இருந்த நிலையில் தற்போது அது 10,000 ஆக குறைந்துள்ளது. எனவே, வார இறுதி நாட்கள் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தும்படி மாநில ஆளுநர் அனில் பைஜாலுக்கு முதல்வர் கெஜ்ரிவால் பரிந்துரை அனுப்பியுள்ளார். இதை முழுவதுமாக ஏற்காத ஆளுநர், தனியார் நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம் என்ற பரிந்துரைக்கு மட்டும் ஒப்புதல் தந்துள்ளார்.

அச்சுதானந்தனுக்கு தொற்று
கேரள  முன்னாள் முதல்வரும், கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவருமான அச்சுதானந்தனுக்கு (98) கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவரை கவனித்து வந்த நர்சுக்கு தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, அச்சுதானந்தனுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் அச்சுதானந்தன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : Corona 3rd wave touches peak Continuing rising infection: daily infection 3.47 lakh; Increase in the number of victims
× RELATED தினமும் 5 முறை ‘சிறப்பு கவனிப்பு’...