×

ஆஸி. ஓபன் டென்னிஸ் 3வது சுற்று நடப்பு சாம்பியன் ஒசாகாவை வெளியேற்றினார் அனிசிமோவா

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவா நடப்பு சாம்பியன் ஒசாகாவை அதிர்ச்சி தோல்விக்குள்ளாக்கி வெளியேற்றினார்.மூன்றாவது சுற்றில் ஜப்பான் நட்சத்திரம் நவோமி ஒசாகாவுடன் (24 வயது, 14வது ரேங்க்) நேற்று மோதிய அனிசிமோவா (20 வயது, 60வது ரேங்க்) 4-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். எனினும், அடுத்த செட்டில் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த அவர் 6-3 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது.3வது மற்றும் கடைசி செட்டில் இரு வீராங்கனைகளும் விடாப்பிடியாகப் போராட, ஆட்டம் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்தது. ஒசாகா 2 முறை மேட்ச் பாயின்ட் வாய்ப்பை பெற்ற நிலையில், மிகுந்த உறுதியுடன் விளையாடிய அனிசிமோசா 4-6, 6-3, 7-6 (10-5) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 2 மணி, 15 நிமிடத்துக்கு நீடித்தது.

கோப்பையை தக்கவைக்கும் முனைப்புடன் களமிறங்கிய ஒசாகா 3வது சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி கண்டு ஏமாற்றத்துடன் வெளியேறினார்.மற்றொரு 3வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்டி (ஆஸி.) 6-2, 6-3 என்ற நேர் செட்களில் இத்தாலியின் கமிலா ஜார்ஜியை வீழ்த்தினார். 4வது சுற்றில் ஆஷ்லி - அனிசிமோவா மோத உள்ளனர். முன்னணி வீராங்கனைகள் விக்டோரியா அசரென்கா (பெலாரஸ்), பார்போரா கிரெஜ்சிகோவா (செக்.), ஜெஸிகா பெகுலா, மேடிசன் கீஸ்  (அமெரிக்கா), மரியா சாக்கரி (கிரீஸ்), பவுலா படோசா (ஸ்பெயின்) ஆகியோரும் 4வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மாரத்தான் போராட்டம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் (18 வயது, 31வது ரேங்க்) - மேட்டியோ பெரட்டினி (இத்தாலி, 7வது ரேங்க்) மோதிய ஆட்டம், டென்னிஸ் ரசிகர்களுக்கு அறுசுவை விருந்தாக அமைந்தது. 4 மணி, 10 நிமிடத்துக்கு நீடித்த இப்போட்டியில் பெரட்டினி 6-2, 7-6 (7-3), 4-6, 2-6, 7-6 (10-5) என்ற செட் கணக்கில் போராடி வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றில் காலடி வைத்தார்.4வது சுற்றில் நடால்: மற்றொரு 3வது சுற்றில் ஸ்பெயினின் ரபேல் நடால் (35 வயது, 6வது ரேங்க்) 6-3, 6-2, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் ரஷ்ய வீரர் கரென் கச்சனோவை (25 வயது, 30வது ரேங்க்) வீழ்த்தினார். கனடாவின் டெனிஸ் ஷபோவலாவ், அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி), கேல் மான்பில்ஸ் (பிரான்ஸ்), கரெனோ புஸ்டா (ஸ்பெயின்), மியோமிர் கெக்மனோவிச் (செர்பியா) ஆகியோரும் 4வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.Tags : Aussie ,Anisimova ,Open Tennis ,Osaka , Aussie. Open Tennis 3rd Round Defending Champion Osaka Anisimova expelled
× RELATED ஆஸி. முன்னாள் நட்சத்திரம் சைமண்ட்ஸ் விபத்தில் பலி