×

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை முறையாக விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை, முறையாக விசாரிக்க வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.தஞ்சாவூரை அடுத்துள்ள மைக்கேல்பட்டி தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த பிளஸ் 2 மாணவி பூச்சிமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதம் மாறச்சொல்லி பள்ளியின் ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தியதால் தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக திடீர் சர்ச்சை கிளம்பியது.

இந்நிலையில் இந்த வழக்கை  சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரி மாணவியின் தந்தை முருகானந்தம் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக உடனடியாக விசாரிக்கக் கோரி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு நேற்று முறையிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ‘‘மாணவியை மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, மாணவியின் பிரேத பரிசோதனை முழுமையாக வீடியோ பதிவு செய்திருக்க வேண்டும். தற்போது விசாரணை செய்யும் போலீசார் எவ்வித குற்றச்சாட்டும் எழாத வகையில் முறையாக வழக்கை விசாரணை செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.

Tags : ICC ,Tanjore , Tanjore student suicide case Order of the tribunal to duly inquire
× RELATED கோயிலில் ஆடல் நிகழ்ச்சிக்கு அனுமதி...