இறந்தவர் பெயரில் அனுப்பிய நோட்டீஸ் ரத்து இயந்திரத்தனமாக அதிகாரிகள் செயல்படக்கூடாது: ஐகோர்ட் கிளை அறிவுரை

மதுரை: மதுரை, அண்ணா நகரைச் சேர்ந்த நாட்ராயன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை குருவிக்காரன் சாலை ஆவின் பூங்கா எதிரே டூவீலர் வல்கனைசிங் கடை வைத்துள்ளேன். கடந்த 1990ல் எனது தந்தை மாநகராட்சி அனுமதியுடன் கடை வைத்திருந்தார். அவரது இறப்புக்கு பிறகு நான் கடையை நடத்தி வருகிறேன். வாடகையை முறைப்படி மாநகராட்சிக்கு செலுத்தி வருகிறேன். கடந்த டிச.29ல் கடைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டதாகவும், 7 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ள வேண்டும் என்றும் மாநகராட்சி தரப்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இறந்து போனவரின் பெயரில் நோட்டீஸ் கொடுத்துள்ளனர் என கூறப்பட்டது.

 இதையடுத்து நீதிபதிகள், மனுதாரரின் தந்தை இறந்து விட்டார். அவருக்கு இறப்பு சான்றிதழ் மாநகராட்சியால் வழங்கப்பட்டுள்ளது. இறப்பு சான்றிதழ் கொடுத்த மாநகராட்சியே, இறந்தவரின் பெயரில் எப்படி நோட்டீஸ் கொடுத்தது? அதிகாரிகள் இயந்திரத்தனமாக இயங்கக் கூடாது. நோட்டீஸ் அனுப்புவதற்கு முன் அவரின் நிலை குறித்து உறுதிப்படுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமை. எனவே, நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்பி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: