×

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் உயிர்பிழைத்த சிறுவனுக்கு ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

நாமக்கல்: நாமக்கல் அருகே விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 13வயது சிறுவன், இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று உயிர்பிழைத்தான். சிறுவனுக்கு செல்போன் மூலம் தமிழக முதல்வர் ஆறுதல் கூறியதால் குடும்பத்தினர் நெகிழ்ச்சியடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம் என்.புதுப்பட்டி அருகே குப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் வர்ஷாந்த்(13). கடந்த 13ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி பூ விற்பனை செய்து விட்டு வீட்டுக்கு சென்றபோது, விபத்தில் சிக்கி படுகாயமடைந்தான். இதைத்தொடர்ந்து நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு, ‘‘முதலமைச்சரின் இன்னுயிர் காப்போம்- நம்மை காக்கும் 48’’ திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள  தனியார் மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு, தீவிர சிகிச்சையளிக்கப்பட்டதை தொடர்ந்து சிறுவன் குணமடைந்து நேற்று வீடு திரும்பினான்.

இந்நிலையில் நேற்று, சிறுவனின் வீட்டுக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் எம்.பி., சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினார்கள்.
அப்போது, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்குமாரின் போன் மூலமாக பேசி சிறுவனுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து சிறுவனின் தாயாரிடமும் முதல்வர் பேசி ஆறுதல் படுத்தினார். முதல்வரே நேரடியாக மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசியதால், சிறுவனின் குடும்பத்தினர் நெகிழ்ச்சி அடைந்தனர்.

தைரியமா இரு... முதல்வர் ஆறுதல்
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் எம்.பி.யின் மொபைல் போன் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுவனின் குடும்பத்தினரிடம் பேசினார். அப்போது, சிறுவனிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘நல்லா இருக்கியா தம்பி’’ என கேட்டு நலம் விசாரித்தார். அதற்கு அந்த சிறுவன் நலமாக இருப்பதாக தெரிவித்தான். உடனே, முதல்வர் வலி இருக்கிறதா? தைரியமா இரு, எப்படி விபத்து நடந்தது? மருந்து -மாத்திரை எல்லாம் கொடுத்தார்களா என கேட்டறிந்தார். அதற்கு சிறுவன் மருந்து -மாத்திரை எல்லாம் கொடுத்தார்கள் என்றான்.

பின்னர் பேசிய முதல்வர், எதுவாக இருந்தாலும், மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமாரிடம் சொல்லவும் என கூறினார். இதைத்தொடர்ந்து சிறுவனின் தாயிடமும் முதல்வர் பேசினார். அப்போது முதல்வர், ‘‘அம்மா வணக்கம்மா, ஸ்டாலின் பேசுகிறேன்’’ என்றார். முதல்வரின் குரலை கேட்டதும் நெகிழ்ச்சி அடைந்த தாய், நன்றி சார் என கூறினார். பையனை ஜாக்கிரதையா பார்த்துக் கொள்ளுங்கள். எதுவாக இருந்தாலும் மாவட்டசெயலாளரிடம் சொல்லுங்கள், அவர் பார்த்துக் கொள்வார் என முதல்வர் கூறினார்.



Tags : Chief Minister ,MK Stalin , Survivors of the Save the Life program Chief Minister MK Stalin offered his condolences to the boy
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...