×

நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மதுரை சிறைச்சாலை நகருக்கு வெளியே மாற்றப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மதுரை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலை, மாநகராட்சிக்கு  வெளியே புதிய இடத்திற்கு மாற்றி அமைக்கப்படும். அந்த  சிறைச்சாலை இடம், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு உகந்த வகையில் பசுமை  பகுதியாக மேம்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் செனனை, தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக மதுரை மாவட்டத்தில் ரூ.51 கோடியே 77 லட்சம் செலவில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.49 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 67,831 பயனாளிகளுக்கு ரூ.219 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:சங்க கால நகரமாக மதுரை இருந்தாலும் நாம் பார்க்கும் நவீன மதுரையை உருவாக்கியது திமுக அரசு தான். சென்னை உயர் நீதிமன்ற கிளை மதுரையில் அமைய வேண்டும் என்று முதன்முதலாக 1973ம் ஆண்டு முயற்சித்தவர் கலைஞர். 2000ம் ஆண்டு கலைஞர் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது.

ஆண்டாள்புரம் பாலத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்டியவரும் கலைஞர் தான். மானம் காத்த மருதுபாண்டியருக்கு சிலை அமைக்கப்பட்டது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவு புதிய கட்டடத்துக்கு 2007ல் நான்தான் அடிக்கல் நாட்டினேன். இப்படி மதுரைக்குச் செய்த சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இத்தகைய சாதனை சரித்திரத்தை மீண்டும் தொடங்கி இருக்கிறோம். சங்கம் வளர்த்த மதுரையில் தலைவர் கலைஞர் பெயரால் நூலகம் அமையப் போகிறது. ரூ.114 கோடி மதிப்பீட்டில் அது கட்டப்பட இருக்கிறது. 2.70 ஏக்கர் நிலத்தில் 2,13,288 சதுர அடி கட்டடப் பரப்பில் 8 தளங்களுடன் அமையப் போகிறது. இந்த நூலகத்துக்கு தேவையான நூல்கள், மின் நூல்கள், இணையவழி பருவ இதழ்கள், ஆகியவை வாங்க 10 கோடி ரூபாயும், தொழில்நுட்ப சாதனங்கள் வாங்குவதற்கு 5 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்ய இருக்கிறார்கள். காலத்தால் அழிக்க முடியாத அறிவுக்கருவூலமாக கலைஞர் நினைவு நூலகம் அமையப் போகிறது.

அதேபோல் மதுரை நகரை மேம்படுத்துவதற்காக மதுரை நகர வளர்ச்சி குழுமத்தை உருவாக்கி இருக்கிறோம். 1972ம் ஆண்டு கலைஞர் முதன்முதலாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தை உருவாக்கினார். அதுதான் சென்னையை நவீன சென்னையாக உருவாக்கியது. அந்த வரிசையில் மதுரை நகர வளர்ச்சி குழுமத்தை தொடங்கி வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பதை எண்ணி நான் பெருமையாக கருதுகிறேன். இந்த வளர்ச்சி திட்டங்களை தயாரித்து செயல்படுத்த 14 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளோம். மேலும்,
< மதுரையின் மைய பகுதியில் அமைந்துள்ள மொத்த விற்பனை சந்தைகள் புறநகர் பகுதிகளுக்கு மாற்றி, நகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான திட்டம் ரூ.50 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்.
<உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். ஏற்கனவே தீ விபத்தில் சேதடைந்த வீரவசந்தராயர் மண்டபம் ரூ.18 கோடி மதிப்பீட்டில் விரைவில் புனரமைக்கப்படும். இரண்டு ஆண்டுகளில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படும்.
< நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலை, மாநகராட்சிக்கு வெளியே புதிய இடத்திற்கு மாற்றி அமைக்கப்படும். தற்போது உள்ள அந்த சிறைச்சாலை இடம், பசுமை பகுதியாக மேம்படுத்தப்படும்.
<தொழில் வளர்ச்சியில் மதுரை மாவட்டத்தை முன்னிறுத்தும் வகையில் மதுரையில்  புதிய சிப்காட் தொழில் பூங்கா ஒன்று அமைக்கப்படும்.
<உலக தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான ஏறு தழுவுதலை முறைப்படுத்தி பாதுகாப்பது நம் கடமையாகும். உலகெங்கிலும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய வகையில் நவீன வசதிகளுடன் கூடிய மாபெரும் அரங்கம் ஒன்று மதுரை, அலங்காநல்லூர் பகுதியில் அமைக்கப்படும்.
<தமிழரின் வீர விளையாட்டுகள் மற்றும் பாரம்பரிய காளை இனங்கள் குறித்த அருங்காட்சியகம் ஒன்று ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பாதுகாப்புடன் போட்டியை கண்டு களிக்கக்கூடிய வகையில் நிரந்தர அரங்கம் வீரர்கள் மற்றும் காளைகளின் நலம் காக்க மருத்துவமனைகள் என பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டதாக இந்த திட்டம் அமையும். இன்றைய நாள் ரூ.51.77 கோடி மதிப்பிலான பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, பழனிவேல் தியாகராஜன், மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஏறு தழுவுதலை முறைப்படுத்தி உலக சுற்றுலாப் பயணிகளை கவர நவீன வசதிகளுடன் கூடிய மாபெரும் அரங்கம் ஒன்று மதுரை, அலங்காநல்லூர் பகுதியில் அமைக்கப்படும்.

Tags : Madurai Jail ,Chief Minister ,MK Stalin , Located in the heart of the city Madurai Prison Transferred out of town: Chief Minister MK Stalin's announcement
× RELATED இருளை அகற்றி ஒளியூட்டும் சின்னமாக...