×

எடையாத்தூர் கிராமத்தில் திறப்பு விழா விவசாயிகள் விரும்பும் இடங்களில் நெல் கொள்முதல் நிலையம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி

திருக்கழுக்குன்றம்: எடையாத்தூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து, ‘விவசாயிகள் எங்கெல்லாம் நெல்கொள்முதல் நிலையம் தேவை என்கிறார்களோ அங்கெல்லாம் நிலையங்கள் தொடங்கப்படும்’ என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.திருக்கழுக்குன்றம் வட்டம் எடையாத்தூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கினார். காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, எம்பி ஜி.செல்வம், மாவட்ட சேர்மன் செம்பருத்தி துர்கேஷ், எம்எல்ஏ பனையூர் பாபு, திருக்கழுக்குன்றம் ஒன்றிய சேர்மன் ஆர்.டி.அரசு, துணை சேர்மன் எஸ்.ஏ.பச்சையப்பன்,  எடையாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.ச.மனோஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு, அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையத்தை விவசாயிகளின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். பின்னர், அமைச்சர் தா.மோ.அன்பரசன், செய்தியாளர்களிடம் கூறியதாவது.விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று எடையாத்தூர், படாளம், மதுராபுதூர், சூணாம்பேடு, காரியந்தாங்கல் ஆகிய பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் ஏற்கனவே சொர்ணவாரி பருவத்தில் 33 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கி, 40 ஆயிரம் மெட்ரிக் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சம்பா பருவத்தில் இன்று தொடங்கியுள்ள 5 இடங்களையும் சேர்த்து மொத்தம் 59 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்படவுள்ளன. அந்த 59 இடங்களிலும் 70 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் 7 இடங்களில் மட்டுமே நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து, சொர்ணவாரி பருவத்தில் 11 ஆயிரம் மெட்ரிக் டன், சம்பா பருவத்தில் 25 இடங்கள் மூலம் 36 ஆயிரம் மெட்ரிக் டன் அளவு மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், இன்றைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விவசாயிகள் மீது அக்கறை கொண்டு எங்கெல்லாம் விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களை கேட்கிறார்களோ, அந்த இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அதன்படி பணிகள் நடக்கின்றன என்றார்.

இதில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக  மண்டல துணை மேலாளர் அருண்பிரசாத், திருக்கழுக்குன்றம் ஒன்றிய திமுக செயலாளர்கள் வடக்கு  வீ.தமிழ்மணி, தெற்கு ஏ.சரவணன், மாவட்ட துணை செயலாளர் விஸ்வநாதன்,  மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல்மாலிக்,   மாவட்ட கவுன்சிலர்கள் கலாவதி நாகமுத்து, ஆர்.கே.ரமேஷ், ஆயப்பாக்கம் ஊராட்சி தலைவர் ஆர்த்தி பாஸ்கர், வாயலூர் தலைவர் மோகனா தாமரைகண்ணன், திருக்கழுக்குன்றம் தாசில்தார் சிவசங்கரன், திமுக நிர்வாகிகள் வெங்கப்பாக்கம் பாபு, பெரும்பேடு கிருஷ்ணமூர்த்தி, தங்கராஜ், கல்பாக்கம் குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Edayathur Village Paddy Procurement Center ,Minister ,Thamo Anparasan , Opening Ceremony at Edayathur Village Paddy Procurement Station where farmers want: Interview with Minister Thamo Anparasan
× RELATED விவசாயிகள் சங்க சிறப்பு கூட்டம்