அடுத்தடுத்து 10 கடைகளில் கொள்ளை முயற்சி : சிசிடிவி மூலம் மர்ம நபர்களுக்கு வலை

திருவள்ளூர்: திருமழிசை ஜெகநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் தாளமுத்தரசன்(33). இவர் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை மூடி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை சென்று பார்த்தபோது கடையின் முன் பக்கத்தில் இருந்த இரண்டு பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியும் உடைக்கப்பட்டு அதிலிருந்த ₹25 ஆயிரம் ரொக்கம், ₹20 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பண்டல்கள் மற்றும் மளிகை பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது. மேலும், அவரது கடைக்கு அருகே உள்ள ஜானகிராமன் என்பவரின் செல்போன் கடையின் பூட்டை உடைத்த நபர்கள் அந்த கடையில் இருந்த  ₹1000த்தை திருடிச்சென்றனர். இதேபோல், அதே பகுதியில் உள்ள வைத்திலிங்கம் என்பவரின் சூப்பர் மார்க்கெட், விஜயன் நடித்தி வரும் துணிக்கடை, சீனிவாசன் நடத்திவரும் எலக்ட்ரிக் கடை, ஜெகன் நடத்திவரும் மளிகை கடை, தாரா ராம் நடத்தி வரும் மற்றொரு எலக்ட்ரிக் கடை, தமிழரசன் நடத்திவரும் அரிசி கடை, மகேஷ் நடத்திவரும் செல்போன் கடை என அடுத்தடுத்து 10 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருட முயற்சி செய்துள்ளது தெரியவந்தது.

ஆனால் அந்த கடைகளின் பூட்டை உடைக்க முடியாததால் கடைகளில் திருட்டு சம்பவம் ஏதும் நடைபெறவில்லை. இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட கடைக்காரர்கள் வெள்ளவேடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு இது தொடர்பாக புகார் மனு அளித்தனர். மேலும் கொள்ளை சம்பவம் நடந்த கடைகளில் மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைக்கும் காட்சிகள் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளை வைத்து போலீசார் குற்றவாளிகள் யார் என தீவிரமாக விசாரித்து வருகின்றனர். திருமழிசை பகுதியில் 10 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இரவு நேர ரோந்து பணி

இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இதுபோன்ற கொள்ளை சம்பவங்களை தடுக்க வேண்டும் என திருமழிசை பகுதியை சேர்ந்த வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: