சிறுமிக்கு பாலியல் தொல்லை பத்மஸ்ரீ விருது பெற்றவர் சிறையில் அடைப்பு

லக்கிம்பூர்:  அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் உத்தப் குமார் பராலி. இவருக்கு கடந்தாண்டு பத்மஸ்ரீ விருதை பெற்றார். அறிவியல், பொறியியல் துறையில் இவர் வழங்கிய பங்களிப்பை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், தான் வளர்த்து வரும் சிறுமியை உத்தப் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இவர் தன்னை கடந்த ஓராண்டாக  பாலியல் வன்கொடுமை  செய்ததாக கடந்தாண்டு டிசம்பரில் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் செய்தார்.

அதன் பேரில், உத்தப் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் இவருக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து லக்கிம்பூர் குழந்தைகள் நல ஆணையம் தொடர்ந்த வழக்கில், அவரது முன்ஜாமீனை நேற்று முன்தினம் கவுகாத்தி உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அவரை கைது செய்யவும் உத்தரவிட்டது. இதனால், நீதிமன்றத்தில் உத்தப் நேற்று சரணடைந்தார். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர்  வடக்கு லக்கிம்பூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: