டெல்லி இந்தியா கேட் பகுதியில் இருந்த 50 ஆண்டு அமர்ஜவான் ஜோதி இடமாற்றம்: தேசிய போர் நினைவிட விளக்குடன் இணைப்பு

புதுடெல்லி: போர்களில் உயிர்த் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவாக டெல்லி இந்தியா கேட் பகுதியில் கடந்த 50 ஆண்டாக சுடர்விட்டு எரிந்த அமர்ஜவான் ஜோதி, அங்கிருந்து அகற்றப்பட்டு தேசிய போர் நினைவிடத்தில் உள்ள ஜோதியுடன் இணைக்கப்பட்டது.முதலாம் உலகப் போரில் உயிரிழந்த இந்திய, இங்கிலாந்து போர் வீரர்கள் நினைவாக, ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில், கடந்த 1921ம் ஆண்டு தலைநகர் டெல்லியில், ‘இந்தியா கேட்’ கட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, 1971ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்று, வங்கதேசம் என்ற தனி நாடு உருவானது. இப்போரில் உயிர்த் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்கள் நினைவாக, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் கடந்த 1972ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி, இந்தியா கேட் பகுதியில் அமர்ஜவான் ஜோதி நினைவிடம் கட்டப்பட்டது. இங்கு ஏற்றப்பட்ட ‘அமர்ஜவான் ஜோதி’ என்ற அணையா விளக்கு கடந்த 50 ஆண்டுகளாக எரிந்து வருகிறது.

நாட்டின் தேசிய விழாக்களான சுதந்திர தினம், குடியரசு தினம், முப்படைகளின் தினம் மற்றும் வெளிநாட்டு தலைவர்கள் வருகை போன்றவற்றின் போது, இந்தியா கேட் பகுதியில் உள்ள அமர்ஜவான் ஜோதி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது வழக்கம். இதற்கிடையே, ஒன்றியத்தில் பாஜ ஆட்சி அமைந்த பிறகு, கடந்த 2019ம் ஆண்டு இந்தியா கேட் பகுதியில் இருந்து 400 மீட்டர் தூரத்தில் 40 ஏக்கரில் பிரமாண்டமான முறையில் புதிய தேசிய போர் நினைவிடம் கட்டப்பட்டது. இங்கு, சுதந்திர இந்தியாவில் தொடங்கி, சீனாவுக்கு எதிரான கல்வான் மோதல் வரையிலும் நாட்டுக்காக உயிர் நீத்த 25,942 ராணுவ வீரர்களின் பெயர்கள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. இங்கும் அணையா ஜோதி ஏற்றப்பட்டது.

ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் தற்போது இந்த போர் நினைவிடத்திற்கு படிப்படியாக மாற்றப்படுகின்றன.அதற்கான முக்கிய நடவடிக்கையாக, இந்தியா கேட் பகுதியில் உள்ள அமர்ஜவான் ஜோதி இடமாற்றம் செய்யப்பட்டு, தேசிய போர் நினைவிடத்துடன் ஒன்றிணைக்கப்படும் என நேற்று முன்தினம் தகவல்கள் வெளியாகின. அதன்படி, ஒருங்கிணைந்த ராணுவ படைகளின் கூட்டு தலைவர் ஏர் மார்ஷல் பி.ஆர். கிருஷ்ணா, அமர்ஜவான் ஜோதியில் இருந்து தீயை எடுத்து, தேசிய போர் நினைவிட ஜோதியுடன் ஒன்றிணைத்தார். இந்த ஜோதி இந்தியா கேட் பகுதியில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

இந்திய வீரர்களின் தியாகத்துக்கு இதுவேஉண்மையான அஞ்சலி

‘இந்தியா கேட் நினைவிடத்தில் 1971ம் ஆண்டு போரில் உயிர்த் தியாகம் செய்த இந்திய வீரர்களின் பெயர்கள் மட்டுமில்லாமல், இந்தியாவுக்கு தொடர்பில்லாத பிற நாட்டு வீரர்களின் பெயர்களும் இருக்கின்றன. ஆனால், புதிதாக கட்டப்பட்ட தேசிய போர் நினைவிடத்தில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அனைத்து வீரர்கள் பெயர்கள் இருப்பதாலும் அங்கு ஜோதி எரிவதே உண்மையான அஞ்சலியாக இருக்கும்,’ என ஒன்றிய அரசு தரப்பில் இந்த மாற்றத்திற்கான காரணம் கூறப்பட்டுள்ளது.

ஜோதி அணையாது

அமர்ஜவான் ஜோதி அணைக்கப்பட்டு, அது தேசிய போர் நினைவிடத்திற்கு மாற்றப்படுவதாக முதலில் தகவல் வெளியானது. பிறகு இதை ஒன்றிய அரசு மறுத்து, ஜோதி ஒன்றிணைக்கப்படுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

எதிர்ப்பும், வரவேற்பும்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘அமர்ஜவான் ஜோதியில் நம் ராணுவ வீரர்களுக்காக ஏற்றப்பட்ட ஜோதி இன்று அணைக்கப்படுவது பெரும் வருத்தமளிக்கிறது. சிலரால் தேச பக்தியையும், தியாகத்தையும் புரிந்து கொள்ள முடியாது. நாங்கள் மீண்டும் நம் ராணுவ வீரர்களுக்காக அமர்ஜவான் ஜோதியை ஏற்றுவோம்,’ என்று கூறியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி தனது பதிவில், ‘அமர்ஜவான் ஜோதி, தேசிய போர் நினைவிட ஜோதியோடு இணைக்கப்படுவது என்பது வரலாற்றை அழிப்பதற்குச் சமம். பாஜ தேசிய போர் நினைவிடத்தை கட்டியதற்காக, அமர்ஜவான் ஜோதியை அணைக்க முடியுமா?’ என்று தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படையின் முன்னாள் துணை மார்ஷல் மன்மோகன் பகதூர் தனது பதிவில், ‘இந்தியா கேட் ஜோதி இந்தியாவின் ஆன்மா. நீங்களும், நானும், நம் தலைமுறையினரும் அங்கு நமது வலிமையான வீரர்களுக்கு சல்யூட் அடித்து வளர்ந்தவர்கள். தேசிய போர் நினைவிடம் சிறந்தது என்றாலும், அமர்ஜவான் ஜோதி நினைவுகள் என்றும் மறக்க முடியாதது’ எனக் கூறி உள்ளார். சில முன்னாள் ராணுவ அதிகாரிகள் அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளனர்.

Related Stories: