கோவின் இணையதளத்தில் இருந்து தடுப்பூசி போட்ட 20,000 பேரின் தகவல்கள் திருட்டு: ஆன்லைனில் விற்பனைக்கு வந்ததால் பரபரப்பு

புதுடெல்லி: கோவின் இணையதளத்தில் இருந்து சுமார் 20,000 பேரின் பெயர், செல்போன் எண், கொரோனா பரிசோதனை முடிவு உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் ஆன்லைனில் கசிந்த விவகாரம் வெளியாகி உள்ளது.கொரோனா தடுப்பூசி செலுத்துதல் மற்றும் பொதுமக்களின் கொரோனா பரிசோதனை முடிவுகளை கோவின் இணையதளம் மூலம் ஒன்றிய அரசு பராமரித்து வருகிறது. இந்நிலையில், இந்த இணையதளத்தின் சர்வர் ஒன்றின் மூலமாக ஏராளமானவர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் பெயர், செல்போன் எண், வயது, கொரோனா பரிசோதனை முடிவு போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன. ‘ரெய்டு பாரம்ஸ்’ எனும் தகவல்களை விற்கும் இணையதளத்தில் சைபர் கிரிமினல் ஒருவர் தன்னிடம் 20,000 பேரின் தகவல்கள் விற்பனைக்கு இருப்பதாக கூறி உள்ளார்.

இதனை, சைபர் பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொள்ளும் ராஜசேகர் ராஜஹரியா என்பவர் கண்டறிந்து தனது டிவிட்டரில் எச்சரிக்கை செய்துள்ளார். மேலும், ஆன்லைனில் இதுபோன்ற தனிநபர் தகவல்கள் வெளியாவதை உடனடியாக தடுக்கும்படி கூகுள் நிறுவனத்திற்கும், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடமும் இமெயில் மூலம் புகார் கூறி உள்ளார். இத்தகவல்களை வைத்து, சைபர் கிரிமினல்கள் செல்போன் மூலமாக சைபர் குற்றங்களில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக ராஜசேகர் எச்சரித்துள்ளார்.

ஒரே போனில் 6 பேர் முன்பதிவு செய்யலாம்

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஒன்றிய அரசின், ‘கோவின்’ இணையதளத்தில் முன்பதிவு செய்யப்படுகிறது. தற்போது, ஒரே செல்போனில் 4 பேர் வரை  முன்பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று மாற்றி அமைத்து, புதிய வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது. இதன்படி, தற்போது 6 பேர் வரை கோவின் இணையதளத்தில் தடுப்பூசிக்காக முன்பதிவு செய்யலாம்.

தவறான தகவலை மாற்ற புதிய பிரிவு

தடுப்பூசி சான்றிதழில் உள்ள தகவல்களில் மாற்றம் செய்வதற்கான வசதியும் தற்போது அளிக்கப்பட்டுள்ளது.  இதற்காக, ‘புகாரை கூறுங்கள்’ என்ற பெயரில் கோவின் இணையதளத்தில் புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. மாற்றம் செய்யப்பட வேண்டிய தகவல்களை இந்த பிரிவில் சேர்த்தால், 3 முதல் 7 நாட்களில் இந்த புதிய தகவல்கள் மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: