கனிம வளங்களை எடுப்பதை டிரோன் மூலம் கண்காணிக்க வேண்டும்; அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: தமிழகம் முழுவதும் சுரங்க நடவடிக்கைகளை டிரோன் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் மதுக்கரையில் உள்ள ஏசிசி சிமென்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2002ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவில், எங்கள் நிறுவனம் வாளையார் வனப் பகுதியில் உள்ள பட்டா நிலம் மற்றும் புறம்போக்கு நிலங்களில் கனிம வளங்கள் உரிய அனுமதியுடன் எடுத்து வந்தது. சிமென்ட் தயாரிப்பதற்கு லேட்டரைட், இரும்பு தாது, பாக்சைட், ஜிப்சம் போன்ற சுண்ணாம்பு கல்லை தவிர, பல தாது பொருட்களையும் பயன்படுத்த வேண்டும். சுரங்க குத்தகை ஒப்பந்தத்தின் பிரிவு 13ன்படி எடை பாலங்கள் மற்றும் சுரங்க குத்தகைகளின் இருப்பிடத்தை காட்டும் திட்டத்தை சமர்ப்பித்து அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற உள்ளோம்.

சுரங்கங்களில் இருந்து எடுக்கப்பட்ட சுண்ணாம்பு கற்களுக்கான ராயல்டி உரிமையை முறையாக அரசுக்கு செலுத்தி வருகிறோம். ஆனால், கனிமவளத்துறை உரிமத்தொகை அதிகம் செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசை ரத்து செய்யவேண்டும் என்று கோரியிருந்தது. இந்த வழக்கு  நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மற்றும் பூமியின் கீழ் உள்ள அனைத்தும் தேசத்தின் செல்வங்கள். அவை இந்திய மக்களுக்கு சொந்தமானது. சில பேராசை கொண்டவர்களால்  சுரண்டப்படுவதை யாராலும் அனுமதிக்க முடியாது. தொழில் வளர்ச்சியை ஆதரிக்கும் அதே வேளையில், தேசத்தின் செல்வமும் பொது நலனும் பாதுகாக்கப்பட வேண்டும். தேசத்தின் நலன் மற்றும் அதன் சொத்துகள் எந்த சூழ்நிலையிலும் சமரசம் செய்ய முடியாது.

அனைத்து வகையிலும் பொதுநலன் பாதுகாக்கப்பட வேண்டும். அரசின் நோட்டீஸ்களில் கேட்கப்பட்டுள்ள ராயல்டி உரிமையை மனுதாரர் செலுத்தவேண்டும். மனுதாரர் சுரங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் இடங்கள் மற்றும் அனைத்து இடங்களிலும்  டிரோன் மூலம் அளவீடு செய்யப்பட வேண்டும். தமிழகத்தில் சுரங்க நடவடிக்கைகள் மற்றும் சுரங்கங்களை கையாள்பவர்கள், வெட்டி எடுக்கப்பட்ட கனிமங்களை மதிப்பிடுவதற்கும், வசூலிக்கப்பட வேண்டிய ராயல்டியை நிர்ணயம் செய்வதற்கும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சுரங்க நடவடிக்கைகளிலும் இனி டிரோன் அளவீடுகளை நடத்தப்படவேண்டும். இந்த உத்தரவுகளை செயல்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக 4 மாதங்களுக்குள்  அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூன் மாதம் முதல் வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

Related Stories: