நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்கு; திங்கட்கிழமை நேரடியாக விசாரிக்க ஐகோர்ட் அனுமதி; தற்போதைய நிலை நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிப்பு

சென்னை: கொரோனா  மூன்றாவது அலை உச்சத்தில் உள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை  நடத்தக்கூடாது எனவும், தள்ளிவைக்க கோரியும் தமிழக அரசின் ஓய்வுபெற்ற  மருத்துவர் நக்கீரன் தொடர்ந்த வழக்கு  சென்னை உயர் நீதிமன்றத்தில்  பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு  அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், மூத்த  வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, தற்போதைய நிலையில் தேர்தலை நடத்தினால்  கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்ட நேரிடும். நாளுக்கு நாள் 17  சதவீதம் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஐ.சி.யு.  அனுமதியும் அதிகரிக்கிறது என்று தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், ஜனவரி 27க்குள் அறிவிப்பாணை வெளியிட வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளதே என்று கேட்டனர். அதற்கு  மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், மாநிலத்தில் உள்ள நிலையை பொறுத்து தேர்தல்  தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம்  2021ல் அனுமதி அளித்துள்ளது என்று தெரிவித்தார். அப்போது, மாநில தேர்தல்  ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் 4 மாதத்தில் தேர்தல் அறிவிப்பை  வெளியிடுவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அவகாசம் ஜனவரி 27ம் தேதியுடன்  முடிவடையவுள்ளது. தேர்தலை கொரோனா பாதுகாப்பு மற்றும் தடுப்பு  நடவடிக்கைகளுடன் நடத்துவது தொடர்பாக டிசம்பர் 10ம் தேதி சுற்றறிக்கை  வெளியிடப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கடைபிடிக்கப்பட்ட  நடவடிக்கைகள் நகர்ப்புற தேர்தலிலும் கடைபிடிக்கப்படும் என்றார். மற்றொரு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன்,  பொதுமக்கள் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தில் அக்கறை கொண்டு தேர்தலை  தள்ளிவைக்க வேண்டும் என்றார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை  திங்கட்கிழமைக்கு தள்ளிவைக்கிறோம். அன்றைய தினம் இந்த வழக்கு மட்டும் நேரடி  விசாரணை முறையில் விசாரிக்கப்படும் என்றனர். அப்போது, அதற்குள் தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டால் இந்த வழக்கு காலாவதியாகிவிடும். எனவே, தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், திங்கட்கிழமை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்து விசாரணையை தள்ளிவைத்தனர்.    

Related Stories: