டெல்லி குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம் பெற கோரி வழக்கு; திங்களில் விசாரிக்க ஐகோர்ட் அனுமதி

சென்னை: டெல்லியில் வரும் 26ம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் தமிழக அரசின் ஊர்திகள் புறக்கணிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா பேரணியில் அனைத்து மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் கலந்துகொள்வது வழக்கம். இந்தியா குடியரசான ஆண்டிலிருந்து இந்த நடைமுறை உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் மேற்குவங்க மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பாபு சார்பில், பொறுப்பு தலைமை நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு முன்பு வழக்கறிஞர் செல்வி ஜார்ஜ் ஆஜராகி, டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழக ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அலங்கார ஊர்திகளை பேரணியில் இடம்பெற உத்தரவிட வேண்டும் என்று முறையிட்டார். இதைக்கேட்ட நீதிபதிகள், முறையாக மனுதாக்கல் செய்யும் பட்சத்தில் வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

Related Stories: