×

கொரோனா பரவலை தடுக்க நாளை முழு ஊரடங்கு; ரயில், பஸ் நிலையங்களில் ஆட்டோ, வாடகை கார்கள் இயங்க அனுமதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வெளியூர்களிலிருந்து வரும் பயணிகளின்  நலன் கருதி, ரயில் நிலையங்கள் மற்றும்  பேருந்து நிலையங்களில் ஆட்டோக்கள், செயலி  மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்கள் இயக்க அனுமதிக்கப்படும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோ னா நோய்த்தொற்றுப் பரவலைக்கட்டுப்படுத்தும் வகையில் இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 5 மணி இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லா முழு ஊரடங்கும் நடைமுறையில் இருந்து வருகிறது.

கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கவும் மற்றும் அவசியம் ஏற்படின் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.  இம்மாத தொடக்கத்தில் 2 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து தற்போது 30 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதேபோல், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில்,  கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலை கருத்தில் கொண்டு மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் கடந்த 11ம் தேதி நடைமுறையில் உள்ள ஊரடங்கை கூடுதல் கட்டுப்பாடுகளுடன் வரும் 31ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

அப்போது, 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்தது. ஆனால், அடுத்தடுத்த  ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து அரசு அறிவிப்பு வெளியிடவில்லை. இதனால், 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்தநிலையில், நாளை(23ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 16.1.2022 ஞாயிற்றுக் கிழமை அன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.  தற்போது தமிழ்நாட்டில் கொரோனா - ஒமிக்ரான் வைரஸ் நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பொது மக்கள் நலன் கருதி தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் எதிர்வரும் 23.1.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த முழு ஊரடங்கு நாளில் கடந்த 16.1.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கின்போது நடைமுறைப்படுத்தப்பட்ட அதே அத்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும். தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் தொடரும். மேலும், வெளியூர்களிலிருந்து வரும் பயணிகளின் நலன் கருதி, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள், செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும். வாடகை கார்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும். மாவட்ட ரயில் நிலையங்களுக்கும் மற்றும் வெளியூர் பேருந்து நிலையங்களுக்கும் இது பொருந்தும். கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,MK Stalin , Full curfew tomorrow to prevent corona spread; Permission to operate autos and rental cars at railway and bus stations: Order of Chief Minister MK Stalin
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...