×

விளாத்திகுளம் அருகே பரபரப்பு; சமுதாயக் கோயில் குளியலறையில் 3 ரகசிய காமிரா: போலீசார் விசாரணை

விளாத்திகுளம்: விளாத்திகுளம் சமுதாயக் கோயில் குளியலறையில் 3 ரகசிய காமிராக்கள் வைத்துள்ளது, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த காமிராக்களை வைத்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே சித்தவநாயக்கன்பட்டி என்ற கிராமம் உள்ளது. இங்கு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட, 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த காமாட்சியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பவுர்ணமி பூஜை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மாதம் தோறும் நடைபெறும் பவுர்ணமி பூஜைக்கு நெல்லை, விருதுநகர் மாவட்டங்களிலிருந்தும், தூத்துக்குடி மாவட்டத்தில் பிற ஊர்களிலிருந்தும் ஏராளமான பெண்கள் குடும்பத்துடன் வருவது வழக்கம்.

அவர்கள் தங்குவதற்காக கோயிலில் குளியலறை மற்றும் கழிவறைகளுடன் கூடிய அறைகள் கட்டப்பட்டுள்ளன. கடந்த 17ம் தேதி ஜனவரி மாத பவுர்ணமி பூஜை நடந்தது. அன்று தைப்பூசத் திருவிழா என்பதால் ஏராளமானோர் பூஜைக்கு வந்திருந்தனர். அப்போது குளியலறையில் ஒருவர் குளித்துக் கொண்டிருந்த போது, சுவரின் மேல்புறம் பார்த்த போது ஒரு வயர் ஒன்று தெரிந்துள்ளது. இதையடுத்து அதைத் தொட்டு பார்க்கையில் அந்த குளியலறையில் 3 கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கோவில்பட்டியில் உள்ள கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களது ஆலோசனையின் பேரில் கோயில் பூசாரி முருகன் (41), விளாத்திகுளம் போலீசில் புகார் செய்தார்.

அதன் அடிப்படையில் கோயிலில் சிசிடிவி காமிரா பொருத்திய டெக்னீசியனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர் யார் கூறி இந்த காமிராவை வைத்தார்? கோயில் நிர்வாகிகளில் யாரேனும் ஒருவருக்கு இதில் தொடர்பு உண்டா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் குளியலறையில் சிசிடிவி காமிரா வைத்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவவே, பவுர்ணமி பூஜைக்கு அறை எடுத்து தங்கிய வெளியூர் பெண்கள் பீதியில் உள்ளனர். இந்த சம்பவம், விளாத்திகுளம் மற்றும் சுற்று வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Vdathigulam , Commotion near Vilathikulam; 3 secret cameras in the community temple bathroom: police investigation
× RELATED சென்னை அருகே போலீசாரால் பறிமுதல்...