தமிழ்நாடு அரசின் 2ம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம்!: கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் கோவிந்த் கர்ஜோல் எதிர்ப்பு..!!

பெங்களூரு: தமிழ்நாடு அரசின் 2ம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை அமல்படுத்த கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் கோவிந்த் கர்ஜோல் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 2ம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை அமல்படுத்த முடியாது; இது சட்டவிரோதமானது. தமிழக அரசின் நடவடிக்கைக்கு நாங்கள் சட்டரீதியாக எதிர்ப்பு தெரிவிப்போம் என்றும் கர்நாடக அமைச்சர் கர்ஜோல் குறிப்பிட்டிருக்கிறார். 2ம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை அமல்படுத்த கர்நாடக அரசு அனுமதிக்காது.

காவிரி நீர்ப்பிடிப்பு 64 கி.மீ. எல்லை பகுதியில் எந்த திட்டத்தை செயல்படுத்தினால் நீதிமன்ற அனுமதி பெற வேண்டும். அவ்வாறு நீதிமன்ற அனுமதி பெற்று தேசிய நதிநீர் ஆணையத்தின் ஒப்புதலை பெற்றால் மட்டுமே இத்திட்டத்தை அமல்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழ்நாடு அரசு தன்னிச்சையாக செயல்படுத்த நினைக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம் என்றும் கர்ஜோல் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.  ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் 2ம் கட்ட பணிகள், ரூ.4,600 கோடியில் செயல்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

Related Stories: