×

லைக், பாலோயர், கமெண்ட்களுக்குப் பதிலாக புதிய வசதியுடன் கூடிய ‘கிளப்ஹவுஸ்’ அரட்டை ‘ஆப்ஸ்’- குரூப்பில் ஆபாசமாக பேசிய 3 பேர் கைது

மும்பை: உரையாடல் வசதியுடன் கூடிய புதியவகை ‘கிளப்ஹவுஸ்’ ஆப்ஸ் பதிவிறக்கம் செய்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இந்த ஆப்ஸ் குரூப்பில் ஆபாசமாக பேசிய 3 பேரை மும்பை போலீசார் முதன்முறையாக கைது செய்துள்ளனர். சமூக வலைதளங்களால் நன்மைகளுடன் தீமைகளும் அதிகரித்து வரும் நிலையில் இந்தியா உள்படப் பல நாடுகளில்  ‘கிளப்ஹவுஸ்’ என்கிற அரட்டைச் செயலி (ஆப்ஸ்) பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த செயலியானது டுவிட்டர் தொடங்கியிருக்கும் ‘ஸ்பேசஸ்’ செயலிக்கு போட்டியாக உருவாகி உள்ளது.

பேஸ்புக், டுவிட்டர், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் உள்ளது போன்று லைக்குகள், ஃபாலோயர்கள், கமெண்ட்களுக்குப் பதிலாகக் குரல்வழி உரையாடலின் மூலமாகப் பயனாளர்கள் இடையே நேரடிப் பிணைப்பை ஏற்படுத்துகிறது ‘கிளப்ஹவுஸ்’ செயலி. இந்த செயலியை பதிவிறக்கம் செய்த பயனர்களிடம் எந்த அழைப்பு வந்தாலும், அவர்கள் ‘கிளப்ஹவுஸ்’ கணக்குக்குள் நுழைய முடியும். அதில் நுழைந்தவுடன் அரட்டை அறைகளில் பங்கேற்கலாம். பயனர் தனது ஒளிப்படத்தைப் முகப்புப் படமாக வைத்துக்கொள்ளலாம் என்பதைத் தவிர முழுக்க முழுக்க குரல்வழி உரையாடலுக்கு ‘கிளப்ஹவுஸ்’ செயலி மிகவும் உபயோகமாக உள்ளதாக பலரும் கருதுகின்றனர்.

குரூப் அட்மின்கள் போன்று, அரட்டை அறைகளைத் தொடங்குபவருக்கு நெறியாளர் (Moderator) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அவர், வாட்ஸ் அப் போன்று கிளப் ஹவுசில் யாரையெல்லாம் இணைத்துக் கொள்ளலாம் என்பதை முடிவு செய்ய முடியும். ஓர் அறையில் பல்லாயிரம் பேர் பங்கேற்க முடியும். அரட்டை முடிந்த பிறகு அதில் பேசப்பட்ட எதையும் நெறியாளரோ பங்கேற்பாளர்களோ மீண்டும் கேட்க முடியாது. அதாவது பேசும் போது மட்டுமே இருதரப்பும் உரையாடலைக் கேட்க முடியும். அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை தேவைப்பட்டால் மட்டுமே ‘கிளப் ஹவுஸ்’ நிறுவனம், குரல் பதிவுகளை விசாரணை அமைப்புகளுடன் பகிர்ந்துகொள்ளும்.

கடந்த 2020ம் ஆண்டு மார்ச்சில் பயன்பாட்டுக்கு வந்த ‘கிளப் ஹவுஸ்’ ஓராண்டுக்குள் உலகம் முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனர்களைப் பெற்றுவிட்டது. பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் அறிமுகமான பலர் ‘கிளப்ஹவுஸ்’ அரட்டைகளில் பெருங்குழுக்களாக ஈடுபட்டுப் பல்வேறு தலைப்புகளில் உரையாடல்களில் ஈடுபட்டுவருகிறார்கள். முதலீட்டு ஆலோசனை, அரசியல் கருத்துகள், தொழில்நுட்ப விவகாரங்கள் தொடர்பான விவாதங்கள் சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்கள், பிரபலங்களின் பங்கேற்புடன் நடந்துவருகின்றன.

அதேநேரம் ‘கிளப்ஹவுஸ்’ செயலிகளில் பேசும் போது அதனை வேறொரு ஸ்க்ரீன் ரெக்கார்டர் மூலம் பதிவு செய்ய முடியும் என்பதால் அதனால் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் ‘கிளப்ஹவுஸ்’ செயலி மூலம் முஸ்லிம் பெண்களுக்கு எதிராக ஆபாசமான கருத்துக்களை தெரிவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில், அரியானாவைச் சேர்ந்த 3 பேரை மும்பை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். அவர்களில் இருவரை உள்ளூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். மற்றொருவரை நேற்றே போலீசார் கைது செய்தனர்.

இவ்விவகாரம் தொடர்பாக சிவசேனா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘மும்பை போலீசுக்கு வாழ்த்துக்கள். கிளப்ஹவுஸ் அரட்டை கும்பலின் மோசடிகளை முறியடித்துள்ளனர். இவ்வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெறுப்பை வளர்க்க வேண்டாம் என்று அவர்களிடம் சொல்லுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கடந்த புதன்கிழமையன்று ெடல்லி போலீசார் தரப்பில், கிளப்ஹவுஸ் செயலி மற்றும் கூகுள் நிறுவனத்திற்கு எழுதிய கடிதத்தில், ‘முஸ்லிம் பெண்களுக்கு எதிராக ஆபாசமான கருத்துகளை கூறிய ஆடியோ குழுவின் அரட்டையின் அமைப்பாளர் குறித்த விபரங்களைக் கோரினர்.

இதற்கிடையே மும்பையில் செயல்படும் அமைப்பு ஒன்று கிளப்ஹவுஸ் செயலி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி மும்பை நகர காவல்துறையிடம் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.  ‘கிளப்ஹவுஸ்’ செயலி பதிவிறக்கம் செய்வோர் எண்ணிக்கை தமிழகத்திலும் அதிகரித்துள்ளதால், அந்த செயலியை பயன்படுத்துவோர், அவர்கள் பேசும் உரையாடல்கள், அதுதொடர்பான புகார்கள் குறித்தும் சைபர் கிரைம் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.


Tags : 3 arrested for talking obscenely in 'Clubhouse' chat 'Apps' group with new feature instead of likes, followers and comments
× RELATED பட்டதாரி, டிரைவர் உள்பட 3பேர் மாயம்