×

குடும்பத்தகராறில் நடந்த கொடூர கொலை கணவனின் துண்டித்த தலையுடன் போலீசில் சரணடைந்த மனைவி: திருப்பதி அருகே பயங்கரம்

திருமலை: குடும்பத்தகராறு தொடர்ந்து நடந்ததால் ஆத்திரமடைந்த மனைவி, தனது கணவனை கத்தியால் வெட்டி தலையை துண்டித்துள்ளார். பின்னர் அந்த தலையுடன் போலீசில் சரணடைந்தார். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் நரசாராவ்பேட்டையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரா (53). வியாபாரி. இவர் திருப்பதி அடுத்த திருச்சானூர் பகுதியில் சொந்தமாக பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி வசுந்தரா (50). இவர்களுக்கு 20 வயதில் ஒரு மகன் உள்ளார். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிகிறது. இவர்கள் அனைவரும் திருப்பதி அடுத்த ரேணிகுண்டாவில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தம்பதி இடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. நேற்றும் வழக்கம்போல் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தகராறு நடப்பதால் குடும்பத்தில் அமைதி இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் வசுந்தரா மன வேதனையில் இருந்துள்ளார். இதேபோல் நேற்றும் நடந்த தகராறின்போது கடும் ஆத்திரமடைந்த வசுந்தரா, சமையல் அறைக்குள் விரைந்து சென்றார். அங்கிருந்த கத்தியை எடுத்து வந்த அவர், திடீரென கணவனின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் நிலைகுலைந்த ரவிச்சந்திரா ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார்.

ஆனாலும் ஆத்திரம் தீராத வசுந்தரா அவரது தலையை துண்டித்து கொலை செய்துள்ளார். பின்னர் துண்டித்த கணவனின் தலையை ஒரு பையில் போட்டுக்கொண்டு ரேணிகுண்டா போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். தலையை பார்த்ததும் ேபாலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீசார் வசுந்தராவை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு தலையின்றி கிடந்த ரவிச்சந்திராவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பதி ரூயா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வசுந்தராவை போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, குடும்ப தகராறில்தான் இந்த கொலை நடந்ததா, அல்லது வேறு ஏதாவது காரணமா என வசுந்தராவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் கணவனின் தலையை துண்டித்து கொன்ற அவரது மனைவி போலீசில் சரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tirupati , In a family dispute, brutal murder, husband's head, surrendered to police
× RELATED லாரி மீது மோதிய கார் தீப்பிடித்தது: 3...