கோவையில் ஜல்லிக்கட்டு கோலாகலம்: அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார்

கோவை: கோவை செட்டிபாளையத்தில் கோவை மாவட்டம் நிர்வாகம் கண்காணிப்பில் கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை நடத்தும் மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழா இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. போட்டியை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டில், 700 காளைகள், 300 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். முதல் காளையாக சரவணம்பட்டி பெருமாள் கோயில் காளை களம் இறங்கியது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து, திடலுக்கு அடுத்தடுத்து பாய்ந்து வந்தன. ஒரு சுற்றுக்கு 50 பேர் என்ற எண்ணிக்கையில், மாடுபிடி வீரர்களும் முரட்டு காளைகளை அடக்க துடிப்புடன் களத்தில் குதித்தனர்.

வாடிவாசலில் இருந்து ஆக்ரோஷமாக பாய்ந்த காளைகளுடன், மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு மோதினர். காளைகளில் சில சீற்றத்துடன் களத்தில் நின்று, போக்கு காட்டின. சில காளைகள், மாடுபிடி வீரர்களிடம் பிடிபட்டன. போட்டியில் அதிகளவில் காளைகளை அடக்கும் வீரருக்கு முதல் பரிசாக ஆல்ட்டோ காரும், 2வது பரிசாக யமஹா மோட்டார்சைக்கிள், 3வது பரிசாக அரை பவுன் தங்ககாசு மற்றும் ஆறுதல் பரிசுகளாக எல்இடி டிவி, பீரோ, சைக்கிள், எவர்சில்வர் அண்டா, ஹாட்பாக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டது. இதேபோல் போட்டியில் வீரர்களுக்கு பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு காங்கயம் பசு மற்றும் கன்று குட்டி, தங்ககாசு, எல்இடி டிவி, பீரோ, சைக்கிள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் இடத்தில் தனியார் மருத்துவமனை சார்பில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருந்தது. கொரோனா தொற்று பரவல் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் கண்டு ரசிக்க பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஜல்லிக்கட்டு போட்டி தொலைக்காட்சி மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. துவக்க விழாவில், கலெக்டர் சமீரன், எஸ்பி. செல்வநாகரத்தினம், கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் மருதமலை சேனாதிபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்த கூத்தைப்பாரில் கிராம கமிட்டி சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு  துவங்கியது. போட்டியில் பங்கேற்க 500 காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல் காளைகளை அடக்க 300 மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. தலா 75 மாடுபிடி வீரர்கள் வீதம் காளைகளை அடக்க களம் இறக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு போட்டியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். வாடிவாசலில் இருந்து முதலாவதாக முனியாண்டவர் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைதொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. வாடிவாசல் வழியே ஆக்ரோசமாக களமிறங்கிய காளைகளை போட்டி போட்டு வீரர்கள் அடக்கினர்.

Related Stories: