கடந்த ஆட்சியில் இருப்பு வைத்திருந்த தரமற்ற ரேஷன் அரிசியுடன் லாரி சிறைப்பிடிப்பு, சாலையில் அரிசியை கொட்டி போராட்டம்-மயிலாடுதுறை அருகே பரபரப்பு

மயிலாடுதுறை : மயிலாடுதுறை அருகே ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரியை சிறைப்பிடித்த பொதுமக்கள், அரிசியை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் சீர்காழி அருகே எருக்கூர் கிராமத்தில் அமைந்துள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலையில் அரைக்கப்பட்டு, அந்த அரிசி மாவட்டம் முழுவதும் உள்ள 424 ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு 2 லட்சத்து 76 ஆயிரத்து 401 குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்று இருப்பதாக பல்வேறு இடங்களில் பொதுமக்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், தரமான ரேஷன் அரிசி வழங்கக்கோரி பொதுமக்களும், பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மயிலாடுதுறை அருகே உள்ள சித்தமல்லி கிராமத்தில் கடந்த ஒருசில மாதங்களாக தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது. அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.  இதில் கடந்த ஆட்சியில் ரேஷன் கடைகளுக்கு வழங்குவதற்காக இருப்பு வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி முற்றிலும் தரமற்றதாக இருந்தது தெரியவந்தது.

இந்நிலையில் நேற்று முன்னிம் இரவு சித்தமல்லி கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு அரிசி ஏற்றி வந்த லாரியை அப்பகுதி மக்கள் சிறைப்பிடித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் பிறகு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்டிஓ., பாலாஜி மற்றும் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் தரமற்ற அரிசி வழங்குவதை நிறுத்தி, நல்ல அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தின் பேரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர்.

Related Stories: