நெல்லை மாநகர பகுதிகளில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்-கட்டுப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

நெல்லை : நெல்லை மாநகர பகுதிகளில் அதிகளவில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் இயற்கை சீர்கேடுகளை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடுகளைத் தவிர்க்க வேண்டி மீண்டும் மஞ்சப்பை என்ற பெயரில் துணிப்பைகளின் பயன்பாடுகளை அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் நெல்லை மாநகரில் சந்திப்பு ரயில் நிலையம் அருகிலுள்ள பகுதிகள், நெல்லை டவுன், பாளை.

மார்க்கெட் பகுதிகள், வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் சாலையில் இருந்து பாளையங்கால்வாயை ஒட்டி மேலப்பாளையம் வரை செல்லும் சாலையோரங்கள் மற்றும் வயல்வெளிகள், மேலப்பாளையத்தில் இருந்து டக்கரம்மாள்புரம் செல்லும் சாலையோரங்கள், தாமிரபரணி ஆற்றின் கரையோரங்கள், நெல்லை சந்திப்பு, டவுன் ரதவீதிகள், தச்சநல்லூர் உள்பட நெல்லை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. எளிதில் மக்காத இப்பிளாஸ்டிக் கழிவுகள் நிலம், நீர்நிலைகள், வயல்வெளிகள் போன்ற இடங்களில் அதிகளவில் தேங்குவதால் பல்வேறு இயற்கை சீர்கேடுகள் உண்டாகிறது.

இப்படி வெளியிடங்களில் குவிந்திருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் சில கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. எனவே இதை தடுக்கும் விதமாக தமிழக அரசு கொண்டு வந்துள்ள மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் அதிகரிக்க நெல்லை மாநராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை குறைப்பது, வீடுகள், கடைகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக சேகரிப்பது மற்றும் பொது இடங்களில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவு குவியாமல் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: