அசுர வேகத்தில் பரவும் தொற்று மாஸ்க் அணியாமல் வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை-நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

நெல்லை : நெல்லை  மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களுக்கு  முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.  பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாட்களில் சந்தைகள் உள்ளிட்ட பொது இடங்களில்  மக்கள் கூட்டம் அலை மோதியது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்குப் பின்னர்  நெல்லை மாவட்டத்தில் கொரோனா அசுர வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா  தொற்று குறைந்த அளவு பாதித்தவர்களை குறைந்த பட்சம் ஒருவாரம்  தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால்  இதை சிலர் பொருட்படுத்தாமல் வெளியில் சுற்றுவதாக தெரிகிறது.

மேலும் முககவசம்  அணியாமல் பொது இடங்களில் சுற்றுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.  அதிகாரிகள் அபராதம் விதித்தாலும் பலர் முக கவசம் சரியாக அணியாமல்  சுற்றுகின்றனர்.இந்நிலையில்  மாநகராட்சி ஆணையர் விஷ்ணுசந்திரன் உத்தரவுப்படி மாநகர நல அலுவலர்  ராஜேந்திரன் மேற்பார்வையில் நெல்லை டவுன் சுவாமி நெல்லையப்பர் கோயில்,  கேடிசி நகர் சோதனைச் சாவடி உள்ளிட்ட மாநகரின் பல்வேறு இடங்களில் சுகாதார குழுவினரும் இணைந்து திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது  முககவசம் அணியாமல் அலட்சியமாக வாகனத்தில் சென்றவர்களை தடுத்து அவர்களுக்கு கொரோனா கட்டாய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த திடீர்  சோதனையில் முககவசம் அணியாமல் சென்ற ஏராளமானோர் சிக்கினர். சுமார் 30  நிமிடத்தில் 10 பேர் வரை சிக்கினர். நெல்லையப்பர்  சுவாமி கோயில் அருகே நடந்த சோதனையில் முக கவசம் அணியாதவர்களை தடுத்து  நிறுத்திய காவலர்கள், பாதுகாப்பு கருதி தங்களையும் கொரோனா பரிசோதனைக்கு  உட்படுத்திக் கொண்டனர். இந்த சோதனை தொடரும் என சுகாதாரத்துறையினர்  தெரிவித்தனர்.

Related Stories: