வால்டாக்ஸ் சாலை மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

சென்னை : மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள், சென்னை துறைமுகம், சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வால்டாக்ஸ் சாலையில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்தின் அருகே மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாக  ஆய்வு செய்து, மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள், செய்தியாளர்கள் சந்திப்பின்போது,

”சென்னை மாநகராட்சியில் முக்கியமான சாலைகளில் ஒன்று இந்த வால்டாக்ஸ் சாலையாகும்.  இவ்வாண்டு பெய்த பெரும் மழையினால் முழங்கால் அளவிற்கு மழைநீர் ஓடியது.  அப்போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆய்வு செய்து,  மழைநீர் வடிவதற்கு போதுமான வடிகால் வசதி இல்லை என்பதை அறிந்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டதின் அடிப்படையில் நானும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர் பாபு அவர்களும், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதிமாறன் அவர்களும் ஏற்கனவே, இப்பகுதியினை பார்வையிட்டு, திட்ட மதிப்பீடு தயார் செய்து, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒப்புதல் பெறப்பட்டு,  அதன் அடிப்படையில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு,  இந்த பகுதிகளில் மட்டும் 8 கல்வெட்டு சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் 4600 மீட்டர் நீர்வழி போக்குகளை சரிசெய்கின்ற பணிகளை நெடுஞ்சாலைத்துறை ஈடுப்பட்டு வருகிறது.  இப்பணிகளை ஜுன் மாதத்திற்குள் நிறைவடையும் எனவும், இப்பணி ரூ.33 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.”

மேலும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதை மின் மோட்டார் (Pumping Station)  மூலம் அப்புறப்படுத்த வழிவகை செய்யப்படும். அவ்வாறு அமைக்கும் பட்சத்தில் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பாடாத வண்ணம் புதியதாக 110 கி.வாட் மின்மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  மேலும்,

§    சென்னை மாநகர எல்லையில் 258கி.மீ. நீளமுள்ள சாலைகள் நெடுஞ்சாலைத்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.  14.5கி.மீ. நீளமுள்ள சாலைகள் மற்றும் 30.71 கி.மீ. நீளமுள்ள வடிகால் பணிகள் மற்றும் 34 சிறு பாலங்கள் இந்த வருடத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு வேலை நடைபெற்று வருகிறது.

§    இந்த மேற்கண்ட பணிகளின் மொத்த மதிப்பீடு ரூ.263 கோடி ஆகும்.

§    இப்பணிகளில் 14.5 கி.மீ. நீளமுள்ள சாலைப் பணிகள் 30.3.2022க்குள் முடிக்கப்படும்.

§    13.5 கி.மீ. நீளமுள்ள வடிகால் மற்றும் 18 சிறுபாலப்பணிகள் 30.6.2022க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

§    மீதமுள்ள பணிகள் 30.9.2022க்குள் பணிகள் முடிக்க நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்பகுதியில் மழைநீரினால் தண்ணீர் தேங்காமல் இருக்க மின்சாரம் வாரியம், மாநகராட்சி, இரயில்வே, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆகிய அலுவலர்களை கொண்டு வடிகால் பணிகளை துரிதப்படுத்த மேற்கண்ட துறை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நாளை (22.01.2022) நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.அதனை தொடர்ந்து, சென்னை சட்டக்கல்லூரி விடுதி வளாகப் பின்புறத்தில் காலியாகவுள்ள இடத்தினை பார்வையிட்டு, அந்த இடத்தில் சாலையோரத்தில் வசிக்கும் பொது மக்களுக்காக புதிய குடியிருப்பு கட்ட ஆலோசனை வழங்கப்பட்டது.

    

டேவிட்சன் சாலையில் உள்ள சவுக்கார்பேட்டை                     சார்-பதிவாளர் அலுவலகம் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதை பார்வையிட்ட பிறகு,  அக்கட்டிடங்களை உடனே இடித்து விட்டு, பதிவுத்துறை அலுவலகம், தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், காவல் நிலையம் மற்றும் பிற துறைகளுக்கு கட்டிடம் கட்ட மதிப்பீடு தயார் செய்து வழங்குமாறு பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்களுடன், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர் பாபு அவர்களும், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறன் அவர்களும் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலகங்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆகியோர் உடனிருந்தனர்

Related Stories: