50 ஆண்டுகளாக எரிந்து வரும் அமர் ஜவான் ஜோதி அணையா தீபம் அணைக்கப்பட இருப்பது வருத்தம் அளிப்பதாக ராகுல் காந்தி ட்வீட்

டெல்லி : டெல்லி இந்தியா கேட் பகுதியில் உள்ள அமர் ஜவான் ஜோதி அணையா தீபம் 50 ஆண்டுகளுக்குப் பின் அணைக்கப்பட்ட உள்ளது. 1971ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் இடையில் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் நினைவாக 1972ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் போர் வீரர் நினைவிடத்தில் அணையா சுடர் ஏற்றப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து எரிந்து வரும் சுடர் இன்று மாலை அணைக்கப்பட உள்ளது. இந்த நிலையில் டெல்லி அமர் ஜவான் ஜோதி அணைக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள ஒன்றிய அரசு, தேசிய போர் நினைவிடத்தில் உள்ள அணையா சுடருடன் ஒன்றிணைக்கப்பட உள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

இதனிடையே 50 ஆண்டுகளாக எரிந்து வந்த அமர் ஜவான் ஜோதி அணையா சுடர் அணைக்கப்பட இருப்பது வருத்தம் அளிப்பதாக காங்கிரஸ் எம் பி ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சிலரால் தேசப் பக்தியையும் தியாகத்தையும் புரிந்து கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். நமது ராணுவ வீரர்களின் தியாகத்தை எப்போதும் நினைவு கூறும் வகையில் மீண்டும் அமர் ஜவானில் ஜோதி ஏற்றப்பட வேண்டும் என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: