பெங்களூருவில் இருந்து நத்தத்திற்கு கடத்தி வந்த 225 கிலோ குட்கா பறிமுதல்-2 பேர் கைது

வேடசந்தூர் : பெங்களூருவில் இருந்து நத்தத்திற்கு 225 கிலோ குட்கா கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.பெங்களூருவில் இருந்து திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிக்கு காரில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை கடத்தி வரப்படுவதாக எஸ்பி சீனிவாசனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை போலீசார், நேற்று வேடசந்தூர் கல்வார்பட்டி சோதனைச்சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி விசாரித்ததில், அதிலிருந்து 2 பேர் கர்நாடகா மாநிலம், தும்கூரை சேர்ந்த வினய்குமார் (36), நத்தம் அருகே கோட்டையூர் குரும்பப்பட்டியை சேர்ந்த கந்தசாமி (37) என்பது தெரிந்தது.

காரை சோதனை நடத்தியதில் குட்கா, புகையிலை பொருட்கள் 225 கிலோ இருந்தது தெரிந்தது.பல லட்சம் மதிப்புள்ள இவற்றை பறிமுதல் செய்த போலீசார், விசாரணைக்காக வினய்குமார், கந்தசாமியை வேடசந்தூர் காவல்நிலையம் அழைத்து சென்றனர். இதில் கந்தசாமி தும்கூரில் பேக் தைக்கும் பணி செய்து வந்ததும், நத்தம் பகுதியிலுள்ள மளிகை, பெட்டி கடைகளில் சில்லரை வியாபாரத்திற்காக குட்கா, புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொடைக்கானலிலும் பறிமுதல்

கொடைக்கானல் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் லாரன்ஸ் மற்றும் அலுவலர்கள் நேற்று அப்சர்வேட்டரி சாலை, நாயுடுபுரம், மூஞ்சிக்கல் பகுதிகளில் சோதனை செய்தனர். இதில் அப்சர்வேட்டரி சாலையில் கலையரங்கம் பகுதியிலுள்ள ஒரு கடையில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து, கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்து சென்றனர்.

Related Stories: