பார்வதிபுரம் மேம்பாலம் சாலை சேதம்-வாகன ஓட்டிகள் அவதி

நாகர்கோவில் : நாகர்கோவில் பார்வதிபுரம், மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் காலை, மாலை வேளையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது. இதனை நிவர்த்திச் செய்ய ஒன்றிய அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் பார்வதிபுரம், மார்த்தாண்டத்தில்  மேம்பாலங்களை கொண்டு வந்தார். மேம்பாலங்கள் கட்டிய பிறகு பார்வதிபுரம், மார்த்தாண்டம் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி இல்லாமல் வாகனங்கள் செல்கிறது. நாகர்கோவிலில் இருந்து பார்வதிபுரம் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் மேம்பாலம் வழியாக செல்கிறது. நாகர்கோவிலுக்கு வரும் அரசு பஸ்களை தவிர மற்ற அனை த்து வாகனங்களும் மேம்பாலத்தை பயன்படுத்தி வருகிறது.

இந்த மேம்பாலத்தை தேசியநெடுஞ்சாலைத்துறை பராமரித்து வருகின்றன.  வட கிழக்கு பருவமழைக்கு பிறகு மேம்பாலத்தின் இருபுற நுழைவு  பகுதி சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது.  மேம்பாலத்திலும் தார் பெயர்ந்து சென்றுள்ளது. இதனால் மேம்பாலம் வழியாக செல்லும் வாகனங்கள் தடுமாறியபடி செல்கின்றன. சிலர் மேம்பாலத்தை தவிர்த்து பாலத்தின் கீழ் பகுதி வழியாக செல்கின்றனர். இதனால் பார்வதிபுரம் ஜங்ஷன் பகுதியில் சில நேரங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

தேசியநெடுஞ்சாலைத்துறை பராமரிக்காமல் உள்ளதால், மேம்பாலத்தின் நுழைவு பகுதி மேலும் சேதம் ஆகும் நிலை உருவாகியுள்ளது.  இதனை உடனே சீர் செய்யவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  இது குறித்து மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் சிவபிரபு கூறியதாவது: பார்வதிபுரம் மேம்பாலத்தை பயன்படுத்தி பல வாகனங்கள் செல்கின்றன.

நோயாளிகளை அழைத்துச்செல்லும் ஆம்புலன்சுகளும் இந்த மேம்பாலம் வழியாக சென்று வருகிறது. கடந்த சில நாட்களாக மேம்பாலத்தின் நுழைவு பகுதியில் சாலை சேதமாகி குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனை சரிசெய்யாத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். பாலத்தின் தொடக்கபகுதியில் உள்ள சேதத்தை சரிசெய்யாமல் விடும்போது மேம்பாலமும் சேதமாகும் நிலை உருவாகும். இதனை கருத்தில் கொண்டு மேம்பாலத்தின் நுழைவு பகுதியில் ஏற்பட்டுள்ள  குழிகளை உடனே சீர் செய்யவேண்டும் என்றார்.

Related Stories: