பேரையூர் பைபாஸ் சாலை பாலத்தில் ஏற்பட்ட பள்ளத்தால் விபத்து

பேரையூர் : பேரையூர் பைபாஸ் சாலையிலுள்ள பாலத்தின் இருபுறங்களிலும் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.மதுரை மாவட்டம், பேரையூர் நகர் பகுதிகளுக்குள் வராமல் கனரகரக வாகனங்கள் செல்ல தாலுகாஅலுவலகம், அரசு மருத்துவமனை, பெண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக பேரையூர் முக்குச்சாலையிலிருந்து ராஜபாளையம் - டி.கல்லுப்பட்டி நெடுஞ்சாலையில் இணைக்கும் இடமான எம்.சுப்புலாபுரம் வரை பைபாஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சாலை வழியாக வத்திராயிருப்பு, எஸ்.மேலப்பட்டி, விருதுநகர் செல்லும் பஸ்கள் செல்கின்றன. மேலும் பகலில் மட்டுமல்லாமல் கனரக வாகனங்கள் இரவு முழுவதும் லாரிகளில் சிமெண்ட் மூட்டைகள், பருத்தி பஞ்சுகள் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு ராஜபாளையம், சிவகாசி, திருவில்லிபுத்தூர், கோவில்பட்டி, நாகர்கோவில் வரை செல்லக்கூடிய அனைத்துரக கனரக வாகனங்களும் இந்த வழியாகத்தான் சென்று வருகின்றன.

இந்த சாலையில் அரசுமருத்துவமனை மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகிலுள்ள பாலத்தின் இருபுறங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு சிறிது, சிறிது பெயர்ந்து பெரும் பள்ளமாக மாறி விட்டது. இந்த பள்ளங்களைத் தவிர்க்க வாகன ஓட்டிகள் கட் செய்து ஓட்டுகின்றனர். இதனால் சாலை விதிகளை மதித்து வருபவர்கள் கூட இந்த பள்ளத்தால் விபத்தில் சிக்குகின்றனர். பகலை விட இரவு நேரங்களில் இந்த பாலத்தின் வழியாக செல்பவர்கள் மிக கவனமாக செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

இதில் பெரிய விபத்து ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்படும் நிலையில் இந்த ஆபத்தான பள்ளங்கள் உள்ளன. உடனடியாக இந்த பள்ளங்களை சரி செய்வ துடன், சாலையின் இருபுறங்களிலும் மீண்டும் பள்ளங்கள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: