நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனு கொடுத்த தி.மு.க.வினரிடம் நேர்காணல்-அமைச்சர் செந்தில் பாலாஜி நடத்தினார்

பீளமேடு :  கோவை மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து  மனு கொடுத்த தி.மு.க.வினரிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி நேர்காணல் நடத்தினார்.தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை மாநில  தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதைத்தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க  அரசியல் கட்சியினர் தயாராகி வருகிறார்கள்.

அதன்படி, கோவை மாவட்டத்தில் கோவை மாநகராட்சியின் 100 வார்டுகள், 7 நகராட்சிகள் மற்றும் 33  பேரூராட்சிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தி.மு.க.வினர் ஏற்கனவே மனுக்களை அளித்திருந்தனர்.  அவர்களுக்கான நேர்காணல் கோவை பீளமேட்டில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் நேற்று நடந்தது.தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கி, விருப்ப மனு தாக்கல் செய்த தி.மு.க.வினரிடம் நேர்காணல் நடத்தினார். நேர்காணலுக்காக தனித்தனி அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதில் விருப்ப மனு கொடுத்தவர்கள் மற்றும் அந்தந்த வார்டுக்கு உட்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி நேர்காணல் நடத்தினார். இதில் தி.மு.க.வினர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

நேர்காணல் தொடங்கியதும் கோவை மாவட்டத்தில் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகளான மதுக்கரை, காரமடை, கூடலூர், கருமத்தம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு உட்பட்டவர்களிடம் நேர்காணல் நடந்தது. அதைத்தொடர்ந்து கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் போட்டியிட விருப்ப  மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய நேர்காணல் இரவு வரை  நீடித்தது.

இந்த நேர்காணலின்போது, தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக் (மாநகர் கிழக்கு),  பையா கவுண்டர் என்கிற கிருஷ்ணன் (மாநகர் மேற்கு),  சிஆர்.ராமச்சந்திரன் (புறநகர் வடக்கு), மருதமலை சேனாதிபதி (புறநகர் கிழக்கு), டாக்டர்  வரதராஜன் (புறநகர் தெற்கு), முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர் உடனிருந்தனர். கோவை மாவட்டத்தில் மீதம் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிட விருப்பம்  தெரிவித்து மனு கொடுத்த தி.மு.க.வினரிடம் நாளை (சனிக்கிழமை) நேர்காணல் நடக்கிறது.

Related Stories: