ரெட்டியார்சத்திரம் பகுதியில் சுண்டல் பயிர் விளைச்சல் அமோகம்

சின்னாளபட்டி : ரெட்டியார்சத்திரம்  ஒன்றியம் கரிசல் பூமி பகுதியாகும். இங்குள்ள கரிசல்பட்டி, கோனூர்,  அனுமந்தராயன்கோட்டை, தருமத்துப்பட்டி, கசவனம்பட்டி பகுதிகளில் கடந்த 20  ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் பனியின் ஈரப்பதத்தில் விளையக்கூடிய பயிரான  சுண்டல் பயிரை (கொண்டைக்கடலை) பயிரிட்டு வருகின்றனர். தற்போது கார்த்திகை  மாதம் பயிரிட்டிருந்த சுண்டல் பயிர் நன்கு விளைந்து வருகிறது.  அனுமந்தராயன்கோட்டையில் இருந்து கரிசல்பட்டி செல்லும் சாலையில் பச்சை  கம்பளத்தை விரித்தது போல் பசுமையாக தோட்டங்களில் சுண்டல் பயிர் செடி  விளைந்துள்ளது.

இதுகுறித்து  விவசாயிகள் கூறுகையில், ‘கரிசல் பூமியான இப்பகுதியில் சுண்டல் பயிரை பனி  காலங்களில் பயிரிட்டு வருகிறோம். கார்த்திகை மாதம் சுண்டல் பயிர் நடவு  துவங்கும். மார்கழி, தை என 2 மாதங்கள் கழித்து மாசி ஆரம்பத்தில் சுண்டல்  பயிர் அறுவடையை துவங்குவோம். சுண்டல் பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச  தேவையில்லை. மற்ற பயிர்களை போல் டிராக்டர்கள் மூலம் நடவு செய்ய முடியாது.  ஏர் பூட்டி கலப்பையை கொண்டு உழும்போது சுண்டல் விதைகளை போட்டு கொண்டு  வருவார்கள். ஈரப்பதத்தில் விளையக்கூடிய சுண்டல் பயிரை இப்பகுதி விவசாயிகள்  20 வருடங்களுக்கு மேலாக பயிரிட்டு வருகிறோம்’ என்றனர்.

பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த கோரிக்கை

மேலும் இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘தற்போது ஒரு சில தோட்டங்களில் சுண்டல் பயிரில் பூச்சி மற்றும் புழுதாக்குதல்  துவங்கியுள்ளது. எனவே வேளாண் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட  நிலங்களை ஆய்வு செய்து சுண்டல் பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த  நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: