திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஸ்டெச்சரில் வைத்து நோயாளிகளுக்கு உணவு விநியோகம்-சமூக வலைதளங்களில் புகைப்படம் வைரல்

திருப்பூர் : திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளை அழைத்து வரும் ஸ்டெச்சரில் வைத்து உணவு கொண்டு வந்து விநியோகிக்கப்படுகிறது.

திருப்பூர் தாராபுரம் ரோட்டில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்நோயாளியாகவும், புறநோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது கொரோனா, டெங்கு வார்டும் அமைக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு தினமும் உள்நோயாளியாக சிகிச்சை பெறுகிறவர்களுக்கு அரசு மருத்துவமனை சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு  வழங்கப்படும் உணவு உரிய பாதுகாப்பின்றியும், சுகாதாரமின்றியும் ஸ்டெச்சரில் கொண்டு வந்து விநியோகிக்கப்படுகிறது. இதனை சாப்பிடும் அவர்களுக்கு ஃபுட்பாய்சன் உள்ளிட்ட பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து, பாதுகாப்பான முறையில் உணவுகளை கொண்டு செல்ல வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

இது குறித்து நோயாளிகளின் உறவினர்கள் சிலர் கூறியதாவது: நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகளை ஸ்டெச்சரில் கொண்டு வருகின்றனர். இந்த ஸ்ெடச்சர் பிணவறையில் பயன்படுத்தப்பட்டதா? அல்லது மற்ற வார்டுகளில் ஏதேனும் பயன்படுத்தபட்டதா?  என்பது தெரியவில்லை. தற்போது நோய் தொற்று அதிகம் பரவி வரும் நிலையில் அத்தியாவசிய தேவையான உணவு பொருட்களை ஸ்டெச்சரில் வைத்து வழங்குவதால் மேலும் பல்வேறு நோய் தாக்கும் நிலை ஏற்படும்.  

எனவே, இதுபோன்று ஊழியர்கள் நடந்துகொள்ளக்கூடாது. உணவுகளை பாதுகாப்பாக கொண்டு வந்து வழங்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக ஊழியர்களுக்கு அறிவுறுத்தவும் வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.அரசு மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளை அழைத்து வரும் ஸ்டெச்சரில் உணவு கொண்டு வரும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.

Related Stories: