தொடர் மழையால் போச்சம்பள்ளியில் பூத்து குலுங்கும் மாமரங்கள்-விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு

போச்சம்பள்ளி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் மாமரங்களில் பூக்கள் பூக்க தொடங்கி உள்ளதால், நடப்பாண்டில் நல்ல விளைச்சல் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் மா சாகுபடி செய்யப்படுகிறது. மா விளைச்சலில் போச்சம்பள்ளி தாலுகா மாவட்டத்தில் 2வது இடத்தில் உள்ளது.

போச்சம்பள்ளி, சந்தூர், ஜெகதேவி, தொகரப்பள்ளி, தாதம்பட்டி, மத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் மா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தோத்தாபுரி ரகம் 60 சதவீதமும், செந்தூரா, நீலம் ரகங்கள் 30 சதவீதமும், அல்போன்சா 5 சதவீதமும் சாகுபடி செய்யப்படுகிறது. பீத்தர், மல்கோவா, ருமானி, பங்கனப்பள்ளி, காலப்பட்டு போன்ற ரகங்கள் 5 சதவீதமும் சாகுபடி செய்யப்படுகிறது.

முன்பருவ ரகமான செந்தூரா, பீத்தர் ஆகிய ரகங்கள் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் பூக்கள் பூத்து பிஞ்சுகள் விட ஆரம்பிக்கும். கடைசி பருவ ரகங்களான பெங்களூரா, பங்கனப்பள்ளி, அல்போன்சா, இசேல், இமாம்பசந்த், குதாதத் போன்றவற்றில் பூக்கள் துளிர் விடும். இந்நிலையில் நடப்பாண்டில் பெய்த தொடர் மழையால் மாமரங்களில் பூக்கள் பூக்க தொடங்கி உள்ளது.

இதுகுறித்து மா விவசாயி சிவகுரு கூறுகையில், ‘கடந்தாண்டு மா மாரங்களில் புதிய வகையான நோய் தாக்குதல் ஏற்பட்டு மா விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. இந்த ஆண்டு மா மரங்களில் பூக்கள் அதிகளவில் பூத்துள்ளதால் விளைச்சலும் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். எனவே பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும், தரமான பூச்சி மருந்துகள் விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் வேளாண்மை அலுவலர்கள் தற்போதே நேரில் ஆய்வு மேற்கொண்டு மா விவசாயிகளுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,’ என்றார்.

Related Stories: