அரசு சின்னங்களை தவறாக பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை: விதிமுறை மீறல்களில் ஈடுபடுவோர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்: டிஜிபி எச்சரிக்கை

சென்னை: ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் சின்னங்களை தவறாக பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினரகள், பொதுத்துறை உறுப்பினர் அதிகாரிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் அரசின் சின்னங்களை தவறாக பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. இதனை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல் துறைக்கு கடந்த 5-ம் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஒன்றிய, மாநில அரசுகளின் சின்னங்களை தவறாக பயன்படுத்தினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

முன்னாள் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் அரசு சின்னங்களை பயன்படுத்தக்கூடாது என்றும்,  ஓய்வு பெற்ற  நீதிபதிகள், அதிகாரிகள் தங்களின் வாகனம், லெட்டர் பேடு, விசிட்டிங் கார்டுகளில் அரசுகளின் சின்னங்களை பயன்படுத்தக்கூடாது என்றும் கூறியுள்ளார். அரசு விதிகளின்படி முக்கிய நபர்கள், அதிகாரிகளை தவிற மற்றவர்கள் அரசு சின்னங்களை பயன்படுத்தக்கூடாது என்றும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். விதிமுறை மீறல்களில் ஈடுபடுவோர் வாகனங்களை சாட்களின் முன்னிலையில் போலீசாா் பறிமுதல் செய்வதோடு அதை வீடியோ பதிவும் செய்துக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: