×

ஒத்துக் கொண்டால்தான் ஒன்றாக படுக்கை!

நன்றி குங்குமம் தோழி

அன்புடன் தோழிக்கு,

நான் இல்லத்தரசி. கணவருக்கு மத்திய அரசுப் பணி. நாங்கள் சென்னை புறநகரில் இருக்கிறோம். பிள்ளைகள் இருவரும் மென் பொருள் பொறியாளர்கள். ஐதராபாத்தில் வேலை. இவர்களை கவனித்துக் கொள்வதுதான் எனக்கு வேலை. அந்த வேலையை குறைக்க பெரியவனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்தோம். சொந்தங்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள் என எல்லோரும் எங்களுக்காக களமிறங்கினர். பையனின் தகுதிக்கு ஏற்ப படித்த, வசதியான பெண்ணை தேடினோம்.
பலரை பார்த்தோம். சொந்தக்காரரை பார்க்க விஜயவாடா சென்றிருந்தோம். அங்கு வழிபாட்டுக்கு போன இடத்தில் அதன் போதகர் சொன்ன பெண்ணை போய் பார்த்தோம் எங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இருந்தாள். போதாதற்கு நல்ல அழகு.

அவர்கள் வீட்டில் 5 பெண்கள். நாங்கள் பார்த்தது 5வதுபெண். பொதுவாக இங்கு ‘ஐந்து பெண்களை பெற்றவன் ஆண்டி’ என்ற பழமொழி உண்டு. ஆனால் அவர்கள் ரொம்ப வசதியானவர்கள். எங்களுக்கு பெண்ணை பிடித்தது. பையனுக்கும் ரொம்பவே பிடித்து விட்டது. நாங்கள் அது வேண்டும், இது வேண்டும் என்று பட்டியல் ஏதும் போடவில்லை. ஆனால் அவர்களே கார், விஜயவாடாவில் வீடு வாங்கித் தருவதாக சொன்னார்கள். கூடவே ‘கடைக்குட்டி. கொஞ்சம் செல்லமா வளர்த்துட்டோம். நீங்களும் கொஞ்சம் நல்லா பார்த்துக்கணும்’ என்றனர். அதற்கு நாங்கள் ‘பையன் ஐதராபாத்ல வேல செய்றதால.... அங்கேயே தனிக்குடித்தனம் வச்சுடுவோம். அவங்க ரெண்டு பேர்தான். அதனால் எந்த பிரச்னையும் இருக்காது. வீடெல்லாம் வேண்டாம்’ என்றோம்.

அதன்பிறகு அவர்கள் விருப்பப்படி விஜயவாடாவில், பெண் பார்த்து தந்த போதகர் தலைமையிலேயே கல்யாணத்தை நடத்தினோம். மறுவீடு, விருந்தெல்லாம் முடிந்த பிறகு ஐதராபாத்தில் தனி வீடு பார்த்து குடி வைத்தோம். இருவரும் சந்தோஷமாகவே இருந்தனர். திருமணமாகி 3 மாதங்கள் கழித்து ஒருநாள் நள்ளிரவில் எனது மகன் போன் செய்தான். போன் செய்தவன், ‘இவ டார்ச்சர் தாங்க முடியலமா’ என்று அழுதான். அதிர்ச்சியடைந்த நாங்கள் விசாரித்ததில், ‘கல்யாணம்’ என் மகன் வாழ்க்கையை புரட்டி போட்டிருப்பதை உணர்த்தியது. ஐதராபாத் போனதில் இருந்து, ‘வேலையை விஜயவாடாவுக்கு மாத்திக்குங்க. எங்க வீட்ல தங்கிக்கலாம். மாத்தல் கெடைக்கலனா வேலையை விட்றுங்க. எங்க அப்பா பிசினசை பாத்துக்கலாம்’ என்று சொல்வாளாம். .

அதை என் மகன் ஆரம்பத்தில் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் நான் சொல்வதை கேட்டால்தான் ஒரே படுக்கை.... இல்லாவிட்டால் தனித்தனி படுக்கை என்று சொல்லியுள்ளாள். முதலில் மாத விலக்கு என்று முதலிரவை தள்ளிப் போட்டாளாம். இப்போது இப்படி சொன்னதால் என் மகன் அதிர்ந்து போயிருக்கிறான். ஆனாலும் ‘நீ என்ன சொன்னாலும் என்னால் வீட்டோட மாப்பிள்ளையாக இருக்க முடியாது. இப்போ புரமோஷன் வரும் நேரம். அதனால் விஜயவாடாவுக்கு வர முடியாது’ என்று சொல்லிவிட்டானாம். அன்று முதல், வேலை முடிந்து வந்ததும் ஆரம்பிக்கும் சண்டை, அவன் மறுநாள் வேலைக்கு போகும் வரை தொடருமாம்.  

அது அடுக்குமாடி குடியிருப்பு. பக்கத்தில் குடியிருப்பவர்கள் ‘இப்படியெல்லாம் சண்டை ேபாட்டால் காலி பண்ணீடுங்க... இல்லாவிட்டால் போலீசில் புகார் செய்வோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். என் மகன் மெதுவாக பேசு என்று கெஞ்சினால், இன்னும் சத்தமாக கத்த ஆரம்பித்து விடுவாளாம்.
வீட்டில் சமைப்பது இல்லையாம். ஓட்டல் சாப்பாடு தான். இரவு தூங்கிக் கொண்டு இருக்கும் போது, ‘எப்போ விஜயவாடா ேபாகலாம்’ என்று கேட்டு சண்டையை ஆரம்பிப்பாளாம். போதாதற்கு அவள் அப்பாவும் போன் செய்து, ‘விஜயவாடா வந்துடுங்க மாப்பிள்ளை... அதான் எல்லோருக்கும் நல்லது’ என்றாராம்.

அழுத பிள்ளையை சமாதானப்படுத்தி விட்டு, உடனே ஐதராபாத் புறப்பட்டுச் சென்றோம். மருமகளிடம் தன்மையாகதான் பேசினோம். ஆனால் அவளோ, ‘நாங்கள் 5 பெண்களும் ஒரே ஊரில்தான் இருப்போம். ஞாயிற்றுக்கிழமைகளில் எங்கள் அக்காக்கள் எல்லாம் எங்கள் வீட்டுக்கு வந்து விடுவார்கள். அன்று நாங்கள் வெளியே விருந்து, சினிமா என்று ஜாலியாக இருப்போம். அதனால் உங்க பையனையும் விஜயவாடாவுக்கு வரச் சொல்லுங்க எல்லாம் சரியாகி விடும்’ என்றாள்.
நாங்கள் மருமகளிடம் எவ்வளவு சமாதானம் பேசியும் பலனில்லாமல் ஊருக்கு திரும்பி விட்ேடாம். அதன் பிறகு அவளது அட்டகாசங்கள் அதிகமாகி விட்டன. எங்கள் பையன் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் ேபாது திடீரென மிளகாய் தூளை அள்ளி போட்டு விடுவாளாம். குடிக்கும் தண்ணீரில் உப்பு, பிளீச்சிங் தூள் என எதையாவது கலந்து அவனை சாப்பிட விடாமல் டார்ச்சர் செய்கிறாளாம்.

என் பையன் எதாவது கேட்டால், ‘வரதட்சணை புகாரில் உள்ளே தள்ளிடுவேன்’ என்று மிரட்டுகிறாளாம். இப்படி தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டு இருந்தவள் திடீரென ஒருநாள், ‘உன்னை எப்படி விஜயவாடா வரவழைப்பது என்று எனக்கு தெரியும்’ என்று சொல்லிவிட்டு அம்மா வீட்டுக்கு போய் விட்டாளாம்.
நாங்களும் விவரம் தெரிந்து அவளை சமாதானப்படுத்த அவள் வீட்டுக்கு சென்றோம். அவர்கள் வீட்டில் உள்ள எல்லோரும், ‘உங்க பையனை எங்கள் வீட்டில் வந்து தங்கச் சொல்லுங்கள் மத்ததை அப்புறம் பேசிக்கலாம். நீங்க கிளம்புங்க’ என்றனர். அவர்களை சமாதானப்படுத்த திருமணம் செய்து வைத்த போதகர் முதல் பலர் மூலமாக முயற்சி செய்தும் பலனில்லை.

என் மகனிடம் அவளுடன் போய் இருக்க சொன்னோம். அவன், ‘அதெற்கெல்லாம் வாய்ப்பில்லை’ என்று கூறிவிட்டான். போலீசில் புகார் கொடுத்தால் பிரச்னையாகும் என்றாலும், ‘என்னால என் கேரியரை விட்டுட்டு விஜயவாடாவுக்கு போக முடியாது. முக்கியமா வீட்டோட மாப்பிள்ளையாக இருக்க முடியாது. அவள் மன நோயாளி போல் நடந்து கொள்கிறாள் அவளுடன் வாழ முடியாது’ என்கிறான். என்ன செய்வது தெரியவில்லை. எங்கள் மகன், மருமகள் யார் சொல்வதை கேட்பது? மருமகள் நடவடிக்கைகள் எல்லாம் பார்த்தால் என் மகன் சொல்வது சரியாக இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. அவர்களை மீண்டும் சேர்த்து வைத்தாலும் அவர்களால் நிம்மதியாக வாழ முடியுமா? என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறேன். என் பிள்ளை நன்றாக வாழ என்ன செய்வது
தோழி?

இப்படிக்கு,
பெயர் வெளியிட விரும்பாத வாசகி.


நட்புடன் தோழிக்கு,

உங்களின் கடிதம் கண்டேன். உங்களின் ஆதங்கம் புரிகிறது. பெற்றோர்களுக்கு பிள்ளைகளைப் பற்றிய கவலை நிச்சயம் இருக்கும். அதுவும்  பிள்ளைகள் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இயல்பானது. ஆனால் நீங்கள் நிறைய விஷயங்களை புரிந்து கொள்ளவேண்டும். உங்கள் மகனுக்கு நீங்கள் தான் கல்யாணம் செய்து வைத்துள்ளீர்கள். அதாவது நிச்சயிக்கப்பட்ட திருமணம். அழகான பெண், வசதியானவள் என்ற உங்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகி உள்ளன. ஆனால் உங்கள் மகனுக்கும் மருமகளுக்கும் இருந்த  எதிர்பார்ப்புகள் இந்த திருமணம் மூலம் நிறைவேறி இருக்கிறதா என்பதையும் யோசித்துப் பார்க்கவேண்டும். திருமணத்திற்கு முன்னர் அவர்கள் இருவரும் மனது விட்டு பேசினார்களா...? அவர்கள் எதிர்பார்ப்புகளை பகிர்ந்து கொண்டார்களா...

என்ற கேள்விகள் எழுகின்றன. அழகு வசதி இவை மட்டும் குடும்ப வாழ்க்கைக்கு ஏற்ற தகுதி அல்ல. உங்கள் மகனின் குணநலன்களும், வரப்போகிற மருமகளின் குணநலன்களும் பொருந்துமா என்பதை நீங்கள் கல்யாணத்திற்கு முன்னர் சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டும். உங்கள் சம்பந்தி வீட்டில் ஏற்கனவே ‘அவள் செல்லமாக வளர்ந்த பெண்’ என்று கூறியுள்ளார்கள். மேலும் தங்கள் ஊரிலேயே வீடு வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளனர். அதை நீங்கள் மறுத்தபோது அந்தப் பெண்ணின் மனநிலை எவ்வாறு இருந்தது என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லையா?

நீங்கள் கூறுவதை பார்த்தால் அவள் அரைமனதுடன் தான் உங்கள் மகன் இருக்கும் ஊரில் குடியேற சம்மதித்துள்ளார். வீட்டில் செல்லமாக வளர்ந்ததால் வேண்டியது உடனே கிடைத்திருக்கும். அனுசரிக்கும் நிலைமை ஏற்பட்டிருக்காது. கூடப் பிறந்தவர் யாரும் ஆண்மகன் இல்லாததாலால் அவர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை புரிந்து கொள்வதில் சிக்கல் இருக்கும். திருமணத்திற்கு பின் உங்கள் மகனை மாற்றிவிடலாம் என்று அவர் எண்ணி இருப்பார். உங்கள் மகனும் திருமணத்திற்குப்பின் இவள் நம்முடன் அனுசரித்து வாழ்ந்து விடுவார் என்று நினைத்திருக்கலாம்.

ஒருவரை ஒருவர் திருமணத்திற்கு முன் புரிந்து கொள்ளாமல் வெறும் அனுமானத்தை வைத்துக் கொண்டு திருமண பந்தத்தில் இணைவது என்பது மிகவும் சிக்கலான விஷயம். கணவன் மனைவி உறவு என்பது உலகத்திலேயே அற்புதமான உறவு. இருவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால்தான் அந்தத் திருமண உறவு நல்லுறவாக தொடரும். கணவன், மனைவியை ‘ஈருடல் ஓருயிர்’ (single functional unit) என்று குறிப்பிடுவார்கள்.

கணவன்-மனைவி இடையில் ஒளிவுமறைவு இருக்கக் கூடாது. அன்பு, அக்கறை, நம்பகத்தன்மை, மனங்களுக்கு இடையே உணர்வுரீதியான நெருக்கம் இருக்க வேண்டும். அதில் உடல்ரீதியான நெருக்கமும் அவசியமானது. ஏமாற்றாத, நிபந்தனை இல்லாத அன்பு, அனுசரிக்கும் தன்மை இருவரிடமும் இருக்க வேண்டும். நான் உயர்ந்தவர் நீ தாழ்ந்தவர் என்ற ஆதிக்க மனப்பான்மை இருக்கக்கூடாது. இருவருக்கும் சம உரிமை, விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்த போதுமான இடம் எல்லா விஷயத்திலும் இருக்கவேண்டும்.

இந்த உறவில் மற்றவர்களின் தலையீடு இருக்கக்கூடாது.  இருவரும் சுயமாக சிந்தித்து முடிவுகளை எடுக்க வேண்டும். அந்த முடிவுகளை பகிர்ந்துகொண்டு எது சரி எது தவறு என்று சிந்தித்து பார்க்க வேண்டும். காலத்தின் கட்டாயத்திற்காகவும், சூழ்நிலைக்காகவும், மற்றவர்களுக்காகவும் அந்த உறவை கட்டாயப் படுத்தக்கூடாது. நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால் உங்கள் மருமகள் கொஞ்சம் பிடிவாத குணம் உள்ளவராக தெரிகிறது. அப்படியிருக்கும்போது உங்கள் மகன் விட்டுக்கொடுத்து அனுசரித்து போகலாம். முடியாத பட்சத்தில் உங்கள் மகனையும் மருமகளையும் மீண்டும் அழைத்து பேசிப்பாருங்கள். உங்கள் பையனும் பிடிவாதமாக இருக்கும் பட்சத்தில் திருமண வாழ்க்கையில் சிக்கல் நீடிக்கும்.

உங்கள் மருமகளுக்கு மனரீதியான குறைபாடு உள்ளது என்று நீங்கள் கருதினால் அதை கையாளும் முறையை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
இருவரும் எப்படி தங்களைப் புரிந்து வைத்துக் கொண்டு உள்ளனர் என்பதை ஆராய வேண்டும். திருமணத்தைப் பற்றி அவர்களின் எதிர்பார்ப்புகள், கருத்து என்னவாக இருந்தது என்பதை எல்லாம் நேரில் கேட்பதின் மூலமாக மட்டுமே பிரச்சனைக்குத் தீர்வு சொல்ல இயலும். அவர்களைக் கட்டாயப்படுத்தி திருமண பந்தத்தில் காலத்தை கழிக்க சொல்ல முடியாது.

அவர்களும் இருவரும் ஒப்புக் கொண்டு பிரச்சனைகளை புரிந்து கொண்டு தங்களுக்குள்ள வேறுபாடுகளை ஒருவரை ஒருவர் சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். அதெல்லாம் ஓரிரு நாட்களில் நடந்துவிடாது. நடைமுறைப்படுத்த சற்றுக் காலம் எடுக்கும். அது வரையிலும் பொறுமையாகவும் பக்குவமாகவும் சூழ்நிலைகளை கையாள வேண்டும் இதை சாத்தியப்படுத்த இருவரையும் நல்ல மனநல ஆலோசகரிடம் அழைத்துச் செல்லுங்கள் உங்களுக்கு நிச்சயம் வழி கிடைக்கும்.

தொகுப்பு: ஜெயா பிள்ளை

Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!