இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு சமநிலை ஏற்படுத்தவே 27% இடஒதுக்கீடு: உச்ச நீதிமன்றம் விரிவான தீர்ப்பு

புதுடெல்லி: மருத்துவ முதுநிலை படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கும்படியும், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கு நடப்பு கல்வியாண்டில் மட்டும் 10 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கும்படியும் கடந்த 7ம் தேதி உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. இந்நிலையில், ஓபிசி.க்கான 27 சதவீத இடஒதுக்கீடு பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து் உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு நேற்று விரிவான, உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது: ஓபிசி பிரிவினருக்கு அகில இந்திய இடஒதுக்கீட்டில் 27 %இடஒதுக்கீடு வழங்கியது நீதித்துறை மறு ஆய்வுக்குட்பட்ட கொள்கை முடிவாகும். மேலும், போட்டி தேர்வுகளில் சமூக, பொருளாதார நிலையின் மூலம் ஒரு பிரிவினர் மட்டும் பயன் பெறுவது என்பது தவிர்க்கப்பட்டு, வாய்ப்பு, தகுதி ஆகியவை அனைத்து சமூகத்துக்கும் பரவலாக்கப்பட வேண்டும். அகில இந்திய ஒதுக்கீட்டில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு முன் நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டிய அவசியம் இல்லை. இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட முடிவு சரியானதே என்பதால், இது தொடர்பான அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்படுகிறது.

இதேப்போன்று, பொருளாதாரத்தின் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு கூடுதலாக 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில், அது எவ்வாறு  நிர்ணயம் செய்யப்பட்டது என்பது தெரிய வேண்டும். அது பற்றி விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது. அதனால், 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் நீதித்துறை தற்போது இருக்கும் சூழலில் தலையிட்டு ஏதேனும் புதிய உத்தரவையோ அல்லது மாற்றத்தையோ கொண்டு வரும் பட்சத்தில் அது மருத்துவ கலந்தாய்வை மேலும் தாமதப்படுத்தும். கொரோனா காலமான தற்போது, மருத்துவர்களின் முக்கியத்துவத்துவம், அவசியத்தை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அதனால், நடப்பாண்டுக்கு (2021-22) மட்டும் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விவகாரத்தில் தகுதி நிர்ணயம், வருமான உச்ச வரம்பு ஆகியவை தொடர்பான விரிவான இறுதி விசாரணை மார்ச் 13ல் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: