இந்திய எல்லைக்குள் நுழைந்து கடத்தல் சிறுவனை மீட்க சீனாவுடன் பேச்சு

புதுடெல்லி: அருணாசல பிரசேதத்துக்குள் நுழைந்து சீன ராணுவம் கடத்தி சென்ற சிறுவனை மீட்க, அந்நாட்டு ராணுவத்துடன் இந்திய ராணுவம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தியாவின் அருணாச்சல பிரதேசம், லடாக் எல்லைகளில் சீன ராணுவம் கடந்த ஓராண்டாக அட்டகாசம் செய்து வருகிறது. இருதரப்பும் எல்லையில் படைகளை குவித்துள்ளதால் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. மேலும், இந்தியாவின் ஆத்திரத்தை தூண்டும் செயல்களில் சீன ராணுவம் அடிக்கடி ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அருணாசல பிரதேசத்தில் உள்ள மேல் சியாங் மாவட்டத்தின் எல்லை கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் மிரம் தரோன், கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணாமல் போய் உள்ளான். இவனை எல்லைக்குள் நுழைந்து சீன ராணுவ வீரர்கள் கடத்தி சென்றதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

இது குறித்து அருணாசல பிரதேசம் எம்பி தபிர் கோ கூறுகையில், ‘மேல் சியாங் மாவட்டத்தில் இருந்து 17 வயது சிறுவன் மிரம் தரோன் கடத்தப்பட்டுள்ளான். பிரம்மபுத்ரா ஆறு இந்தியாவுக்குள் நுழையும் இடத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. அவனை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார். இது குறித்து இந்திய ராணுவத்தினர் கூறுகையில், ‘சிறுவன் தரோன் கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்தவுடன் ஹாட்லைனில் சீன ராணுவத்துடன் பேசப்பட்டது. காட்டுப் பகுதியில் மூலிகை செடிகளை சேகரிக்கவும், வேட்டையாடவும் வந்த சிறுவனை காணவில்லை. அவனை கண்டுபிடிக்க உதவும்படி கேட்டுள்ளோம். மேலும், அவனை எல்லை ராணுவ ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒப்படைக்கும்படியும் கோரியுள்ளோம். இது தொடர்பாக சீன ராணுவத்துடன் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது,’ என்றனர்.

* பிரதமர் மீது ராகுல் தாக்கு

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘அருணாசல பிரசேதத்தில் சீனாவால் சிறுவன் கடத்தப்பட்டுள்ள சம்பவத்தில் பிரதமர் மவுனம் காப்பது ஏன்? கடத்தப்பட்ட சிறுவன் தரோன் குடும்பத்துடன் நான் இருக்கிறேன். நம்பிக்கை இழக்க வேண்டாம். குடியரசு தினவிழாவுக்கு சில நாட்கள் உள்ள நிலையில் சீனாவால் சிறுவன் கடத்தப்பட்டுள்ளான். பிரதமர் மோடி இது குறித்து கவலைப்படவில்லை,’ என கூறியுள்ளார்.

Related Stories: