உலகளவில் நாட்டின் பெருமையை கெடுக்க முயற்சி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

புதுடெல்லி: இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு பெருவிழாவில் இருந்து ‘தங்க இந்தியாவை நோக்கி’ எனும் விழாவை பிரதமர் மோடி காணொலி மூலம் நேற்று தொடக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: ‘நாட்டின் முன்னேற்றமே நமது முன்னேற்றம். புதிய இந்தியாவை உருவாக்குவதில் இந்த உணர்வு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. புதிய இந்தியா இப்போது உருவாகி வருகிறது. இதற்கு ஒவ்வொருவரின் முயற்சியும், கடமையும் முக்கியமானது. முரண்பாடுகள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதற்கான நிர்வாக நடைமுறை இப்போது உருவாக்கப்பட்டு வருகிறது. சமத்துவம், சமூக நீதி என்ற அடித்தளத்தின் மீது இந்த சமூகம் நிற்க வேண்டும்.

நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து நமது உரிமைகளை பற்றி மட்டுமே பேசி வருகிறோம். இந்த 75 ஆண்டு காலமும் உரிமைக்கான போராட்டம், சண்டைக்காகவே வீணாக்கப்பட்டு இருக்கிறது. நமது கடமைகளை மறந்து விட்டு, நாட்டை பலவீனப்படுத்தி இருக்கிறோம். கடந்த 75 ஆண்டுகளாக நமது கடமைக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் கடமை, பொறுப்பு என்ற ஒளிவிளக்கை ஏற்ற வேண்டும். அப்போதுதான், நாடு புதிய உயரத்தை எட்டும். தற்போது, உலகளவில் நாட்டின் பெருமையை கெடுக்க முயற்சிகள் நடக்கிறது. உலகளவில் செயல்படும் அமைப்புகள், இந்தியாவை பற்றிபரப்பப்படும் புரளிகளை தகர்க்க வேண்டும். அவர்களுக்கு உண்மைகளை எடுத்து கூற வேண்டும். அரசியல் என்ற பெயரில் நாம் நமது பொறுப்புகளை ஒதுக்கி விட முடியாது. ஏனெனில், இது அரசியல் அல்ல. நாட்டின் பெருமை சம்பந்தப்பட்டது. இவ்வாறு  அவர் பேசினார்.

Related Stories: