5ஜி செல்போன் கதிர்வீச்சு ஆபத்து நீங்கியது அமெரிக்காவுக்கு மீண்டும் ஏர் இந்தியா விமான சேவை

புதுடெல்லி: அமெரிக்காவின் 5-ஜி செல்போன் சேவை  காரணமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவையை ஏர் இந்தியா மீண்டும் துவக்கியது. அமெரிக்காவில் அதிவேக திறன் கொண்ட 5-ஜி செல்போன் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 5ஜி சேவைக்காக நிறுவப்பட்ட செல்போன் கோபுரங்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சால் விமானங்கள் புறப்படுவதிலும், தரையிறங்குவதிலும் விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதனால், ஏர் இந்தியா நிறுவனத்தின் 8 விமானங்கள் உட்பட பல்வேறு நாடுகள் அமெரிக்காவுக்கான விமான சேவையை நேற்று முன்தினம் ரத்து  செய்தன.

இந்நிலையில், அமெரிக்காவின் பெடரல் விமான போக்குவரத்து நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பி-777 ரக போயிங் விமானங்களில் விமானம் எத்தனை அடி உயரத்தில் பறக்கிறது என்பதை அறிய ரேடியோ உயரமானிகள் பொருத்தப்பட்டுள்ளன. 5-ஜி செல்போன் சேவையால், அந்த வகை விமானங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது,’ என தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, நேற்று முதல் அமெரிக்காவுக்கு ஏர் இந்தியா விமானங்கள் மீண்டும் இயங்க தொடங்கி உள்ளன. இது குறித்து ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘அமெரிக்காவுக்கு  பி-777 ரக விமானங்களை  இயக்குவதற்கு போயிங் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. நேற்று காலை நியூயார்க் நகருக்கு ஒரு விமானம் புறப்பட்டு சென்றது. அதனை தொடர்ந்து பயணிகளுடன் மேலும் 5 விமானங்கள் அமெரிக்காவுக்கு சென்று உள்ளன,’’ என்றார்.

Related Stories: