கொரோனாவால் இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க ரூ.182 கோடி நிதி: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

புதுடெல்லி: ‘தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக ரூ.182 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,’ என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி கவுரவ் குமார் பன்சால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை விசாரித்த நீதிமன்றம், இந்த இழப்பீடு வழங்குவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை, எவ்வளவு தொகை வழங்கப்பட்டுள்ளது ஆகிய விவரங்களை தாக்கல் செய்யும்படி மாநிலங்களுக்கு உத்தரவிட்டது. இதன்படி, தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் குமணன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழகம் முழுவதும் இழப்பீடு கோரி 57,147 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

இதில், இதுவரையில் 38,114 பேருக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. 10,138 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கும்படி  உச்ச நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை தமிழக முழுமையாக செயல்படுத்தி வருகிறது. அதிகபட்சமாக சென்னையில் இருந்து 8,160 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 3,294 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, கோவையில் 4,181 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 3,017 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, ரூ.182 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள மற்ற விண்ணப்பங்களையும் பரிசீலித்து விரைவாக தொகை வழங்கப்படும். மேலும், இந்த இழப்பீடு பெறுவது தொடர்பாக விண்ணப்பிக்க பத்திரிகை, ஊடகங்கள், இணையதளங்கள் மூலமாக விளம்பரங்களும் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: