ரேஷன் அரிசி கடத்திய பெண் உள்பட 2 பேர் கைது: ஆட்டோ பறிமுதல்

திருவள்ளூர்: தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்துவது தொடர்கதையாக உள்ளது. இதையொட்டி, திருத்தணி அருகே பள்ளிப்பட்டு பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்துவதாக  குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் போலீசார் பள்ளிப்பட்டு பகுதியில் நேற்று முன்தினம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை மறித்தனர். ஆனால், போலீசாரை பார்த்ததும் டிரைவர், ஆட்டோவை நிறுத்தாமல் வேகமாக சென்றார்.

உடனே போலீசார், ஆட்டோவை விரட்டி சென்று பிடித்தனர். பின்னர் ஆட்டோவில் சோதனை செய்தபோது தலா 50 கிலோ கொண்ட 4 அரிசி மூட்டைகள் இருந்தன. அதை பிரித்து பார்த்தபோது, ரேஷன் அரிசி என தெரிந்தது. விசாரணையில், அத்திமாஞ்சேரிப்பேட்டையை சேர்ந்த புஷ்பா (36), ஆட்டோ டிரைவர் ராஜேஷ் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200 கிலோ ரேஷன் அரிசி, ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 2 பேரையும், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: