வாலிபருக்கு பீர் பாட்டிலால் சரமாரி அடி: இளம்பெண் உட்பட 3 பேருக்கு வலை

ஆவடி: அம்பத்தூர் அடுத்த கொரட்டூர், மாதனாங்குப்பம், அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சரண் (22). வேலையில்லாமல் உள்ளார். இவரது வீட்டின் அருகில் வசிக்கும் நண்பர் பிரபு (25). ஆவடியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் செல்போனில் அடிக்கடி ஆபாசமாக பேசியுள்ளார். இதுபற்றி இளம்பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு, இளம்பெண், 2 உறவினர்களுடன், பிரபு வீட்டுக்கு வந்து  அவரை கண்டித்துள்ளனர். அப்போது, அங்கிருந்த  பிரபுவின் நண்பர்கள் சரண், பிரவீன், ரஞ்சித் ஆகியோர் அவர்களை தட்டி கேட்டனர். அதில், இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, கைகலப்பாகி, ஒருவரையொருவர்  தாக்கி கொண்டனர். அந்த நேரத்தில், இளம்பெண்ணுடன் வந்த 2 பேர், பீர் பாட்டிலை எடுத்து, சரணை சரமாரியாக தாக்கினர். அதில்,  அவர் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். உடனே, இளம்பெண் உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பிவிட்டனர். பின்னர், உறவினர்கள் படுகாயமடைந்த சரணை, 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்படி, கொரட்டூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான இளம்பெண் உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றார்.

Related Stories: