தமிழ்நாட்டில் கீழடி, சிவகளை உள்ளிட்ட ஏழு இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் நடத்தப்படும்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் ஏழு இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழின் தொன்மையையும், தமிழரின் பண்பாட்டையும் அறிவியல்பூர்வமாக நிறுவ வேண்டுமானால் முறையான அகழாய்வுகள் அவசியமாகும் எனக்குறிப்பிட்டுள்ளார்.

பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் தொன்மை, பண்பாடு மற்றும் விழுமியங்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் கீழடி, சிவகளை, கங்கைகொண்டசோழபுரம், மயிலாடும்பாறை, வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி, பெரும்பாலை, ஆகிய ஏழு இடங்களில் அகழாய்வுகள் செய்யப்படவுள்ளன. இதில் கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வும், சிவகளையில் 3-ம் கட்ட அகழாய்வும், கங்கைகொண்ட சோழபுரம், மயிலாடும்பாறையில் 2-ம் கட்ட அகழாய்வும் நடத்தப்படும் எனவும், வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி, பெரும்பாலையில் முதற்கட்ட அகழாய்வு மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சங்ககாலக் கொற்கைத் துறைமுகத்தின் தொல்லியல் வளத்தினைக் கண்டறிய கடலோரங்களில் ஆய்வினை மேற்கொள்ள இந்தியக் கடலாய்வு பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கடல் ஆய்வு மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும்,  அகழாய்வுப் பணிகள் வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் இறுதி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: