×

வேடசந்தூர் அருகே விவசாயம் செழிக்க வேண்டி சிறுமியை நிலா பெண்ணாக தேர்வு செய்து வினோத வழிபாடு

வேடசந்தூர்: வேடசந்தூர் அருகே விவசாயம் செழிக்க வேண்டி சிறுமியை நிலா பெண்ணாக தேர்வு செய்து வினோத வழிபாடு நடந்தது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே குட்டம் ஊராட்சியில் உள்ளது கோட்டூர் கிராமம். இங்குள்ள மாசாடச்சியம்மன் கோயில் திருவிழாவின் ஒரு பகுதியாக நிலாப்பெண் என்னும் விழா நடைபெறும். இதில், பாரம்பரியமாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு சிறுமியை நிலா பெண்ணாக தேர்வு செய்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா தற்போது நடந்து வருகிறது. இதையொட்டி நிலாப்பெண் தேர்வு நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

இதில் பிரகதீஷா (11) என்ற 6ம் வகுப்பு மாணவி நிலாப்பெண்ணாக தேர்வு செய்யப்பட்டார். முதலில், இவருக்கு ஊர் எல்லையில் உள்ள சரலைமேடு என்னுமிடத்தில் கிராமமக்கள் ஆவாரம்பூ வைத்து அலங்காரம் செய்தனர். இதன்பிறகு தலையில் ஆவாரம்பூ கூடையோடு ஊர்வலமாக முக்கிய தெருக்கள் வழியாக கோயிலுக்கு அழைத்து வந்தனர். கோயில் முன்பாக மாவிளக்கு, முளைப்பாரி வைத்து கும்மியடித்து வழிபட்டனர். பிறகு சிறுமியை குடிசையில் அமர வைத்து சத்தான உணவுப் பொருட்கள் வழங்கினர். இதனைத்தொடர்ந்து ஊர் எல்லையில் உள்ள கிணற்றுக்கு அவரை அழைத்துக் கொண்டு சென்றனர்.

அங்கு அவரது தலையில் இருந்த பூக்கூடையை கிணற்றில் மிதக்க விட்டனர். மேலும் அவர் வைத்திருந்த தீப விளக்கையும் கிணற்றில் மிதக்க விட்டனர். இந்த விளக்கும், பூக்கூடையும் தண்ணீரில் மூழ்காமல் சுற்றி வரும் வரை கிராமமக்கள் அங்கேயே காத்திருந்தனர். அவை கிணற்றை சரியாக சுற்றி வந்தபின், நிலாப்பெண் சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். கிராம மக்கள் கூறுகையில், ‘‘ஊர் மக்கள் நோயின்றி வாழவும், விவசாயம் செழிக்கவும், உலக நன்மைக்காகவும் இந்த விழாவை நடத்துகிறோம். திருவிழா இரவு 8 மணிக்கு துவங்கி அதிகாலை 3 மணி வரை நடைபெற்றது’’ என்றனர்.

Tags : Vedasandur , Bizarre worship of choosing a girl as a moon girl to make agriculture prosperous near Vedasandur
× RELATED வேடசந்தூர் அருகே பட்டாசுகள் ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது