கண்ணாடி விரியன் பாம்பிடம் இருந்து எஜமானர் குடும்பத்தை காப்பாற்றிய நாய்; குரைத்து காட்டி கொடுத்தது

தஞ்சை: தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் உள்ள திருப்பதி நகரை சேர்ந்தவர் கண்ணன். மருந்து விற்பனை பிரதிநிதி. இவரது மனைவி பிரமிளா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இவர் வேலன் என்ற நாயை வளர்த்து வருகிறார். நேற்று காலை கண்ணன் வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். வீட்டில் மனைவியும், மகளும் இருந்தனர். வீட்டு வேலைக்கு வரும் பெண் வேலையை முடித்துவிட்டு நாயை அவிழ்த்துவிட்டு காம்பவுண்ட் சுவரை பூட்டி விட்டு செல்வது வழக்கம்.

அதன்படி நேற்று வேலைக்கு வந்த பெண் வேலையை முடித்துவிட்டு புறப்படும்போது நாயை அவிழ்த்துவிட்டு கேட்டை பூட்டிவிட்டு சென்றார். அப்போது காம்பவுண்ட் சுவர் வழியாக 6 அடி நீள கொடிய விஷமுடைய கண்ணாடி விரியன் பாம்பு உள்ளே புகுந்தது. அந்தப் பாம்பு வீட்டில் மாடிப்படி வழியாக ஏறி ஜன்னல் வழியாக வீட்டிற்குள் செல்ல முயன்றது. இதனைப் பார்த்த நாய் தொடர்ந்து குரைத்துக்கொண்டே இருந்தது. நீண்டநேரமாக நாய் குரைப்பதை பார்த்த பிரமிளா வெளியே வந்து பார்த்தபோது பாம்பை கண்டு திடுக்கிட்டார். உடனடியாக அவர் தனது கணவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து கண்ணனும் வீட்டிற்கு வந்தார்.

இது குறித்து கண்ணன் தஞ்சை நகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பின்னர் தீயணைப்பு வீரர்கள் 3 பேர் சம்பவ இடத்திற்கு வந்து பாம்பை தேடினர். ஒரு மணி நேர தேடலுக்குப் பின்னர் பாம்பு பதுங்கி இருந்த இடத்தை கண்டுபிடித்து பிடித்து சென்றனர். வீட்டுக்குள் புகுந்த பாம்பை காட்டிக்கொடுத்து எஜமானர் குடும்பத்தைக் காப்பாற்றிய நாயை பார்த்து அப்பகுதியினர் நெகிழ்ந்தனர்.

Related Stories: